Header Ads



முஸ்லிம்களின் நிலை மிக கவலைக்குரியது, யாருடைய கையால் மென்மையாக அடிவாங்கலாம் என நாம் முடிவெடுக்க வேண்டும்

முஸ்லிம் சமூக அரசியல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொன்டுள்ள விரிவுரையாளர் கலாநிதி அஸீஸ் அவர்கள் Daily Ft, Colombo Telegraph போன்ற இணையப் பத்திரிகைகளின் பத்தி எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி, மீள்பார்வை.
இலங்கையின் அரசியலை நோக்கும் போது முஸ்லிம்கள் காலாகாலமாக ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கும் போக்கினை கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் 90 வீதத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஐ.தே.க.வை தலைமையாக கொண்ட முன்னணிக்கே வாக்களித்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் இந்நிலை தொடர வேண்டுமா? முஸ்லிம்களது அரசியல் எவ்வகையில் பயணிக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் நிலைமையைப் பார்க்கின்ற போது மிகவும் கவலைக் குரியதாகக் காணப்படுகின்றது. காரணம், முஸ்லிம் அரசியல் கட்சிகளினுடைய தலைமைகளை நம்புவதா? அல்லது இரண்டு பிரதான கட்சிகளில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்புவதா? அல்லது சர்வதேசத்தின் இஸ்லாமியத் தலைவர்களது செயற்பாடுகளை நம்புவதா? என்கின்ற இக்கட்டான நிலைமைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

பிரதான காரணம், முஸ்லிம் கட்சிகளில் உள்ள தலைமைத்துவங்கள் முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை சரியான முறையில் -இதுவரையில் சில கட்சித் தலைவர்கள் அடையாளப்படுத்தினாலும்- முற்று முழுதாக அவை அடையாளப்படுத்தப்படவில்லை. ஆகவே முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை சற்று குறைவடைந்துள்ளது.

அதேநேரம் இரண்டு பிரதான கட்சிகளையும் பார்ப்பீர்களாக இருந்தால், இரண்டு கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களை ஏமாற்றுகின்ற கட்சிகளாகத்தான் காணப்படுகின்றன. ஆகவே ஒன்று முஸ்லிம் கட்சிகளைப் பலப்படுத்துவதா? அல்லது ஏமாற்றுகின்ற இரண்டு கட்சிகளில் எது குறைவாக எம்மை ஏமாற்றுகின்றது என்று பார்ப்பதா? பொதுவாக இரண்டு கட்சிகளுமே எங்களை ஏமாற்றுகின்றன. ஐ.தே.க.வும் அடிக்கிறது. மஹிந்தவின் கட்சியும் எமக்கு அடிக்கிறது. யாருடைய கையால் மென்மையாக அடிவாங்கலாம் என்பதை வைத்தே நாம் முடிவெடுக்க வேண்டும்.

இவையெல்லாவற்றையும் தாண்டுவ தற்கு முஸ்லிம்கள் கல்வி ரீதியாக முன்னேற வேண்டும். கல்வி அறிவு இல்லாதது முஸ்லிம்களது இந்த அரசியல் நடவடிக்கைகளில் தெளிவாகவே புலப்படுகின்றது. இதுவரை காலமும் பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தி வந்த சமூகம் தொடர்ந்தும் பொருளாதாரத்தில் தங்கியிருக்க முடியாத ஒரு நிலை. மரபுவழிப் பொருளா தாரம் வீழ்ச்சியடைந்து விட்டதென்றே நான் கருதுகிறேன். ஆகவே பொருளாதாரத்தை சரியாக இலக்குவைத்து எங்களை தாக்குகின்றார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் நாம் அரசியலில் எழுச்சி பெற வேண்டுமாக இருந்தால் கல்வி கற்ற ஒரு சமூகம் உருவாக்கப்பட வேண்டும். முஸ்லிம்களுடைய கல்வி வளர்ச்சி மிக மிகப் பின்தங்கிய நிலையில் காணப்படுவதன் காரணமாக இந்த சமூகத்தை முன்னுக்குக் கொண்டு வருவதில், அரசியல்வாதிகளாக இருக்கலாம், கல்விமான்களாக இருக்கலாம் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகக் கல்வியை எடுத்துக் கொண்டால் வெறும் 4.9 வீதமான முஸ்லிம் மாணவர்களே பல்கலைக்குத் தெரிவுசெய்யப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக கலைத் துறையில் 3 வீதம். சட்டத்துறையில் 2 வீதம். மருத்துவத் துறையில் 1.7 வீதம். பொறியியல் துறையில் 1.2 வீதம். இதுதான் எங்களுடைய பங்களிப்பு. இதை வைத்துக் கொண்டு எவ்வாறு இந்த சமூகத்தை முன்னகர்த்துவது? ஆகவே முஸ்லிம்கள் அரசியல் செய்வது தேவைதான். ஆனால் அரசியலில் காட்டுகின்ற ஆர்வத்தை சற்றுக் குறைத்து கல்வியில் ஆர்வம் செலுத்துவார்களாக இருந்தால் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்களை இந்நாட்டில் கண்டுகொள்ள முடியும்.

இலங்கையில் முஸ்லிம் சமூகம் இது வரை காலமும் எதிர்கொண்டு வந்த இன்னல்களை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்? முஸ்லிம்கள் மத்தியில் எப்படியான மாற்றங்கள் நிகழ வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் ஒரு நன் மதிப்பைப் பெற்ற சமூகமாகவே இதுகால வரையும் இருந்து வந்தது. முஸ்லிம்களால் ஏனைய சமூகத்தவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் கொடுக்கப்படவில்லை. 2500 வருட கால வரலாற்றைக் கொண்ட இந்நாட்டில் சுமார் 1200 வருட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்கள் இருக்கின்றனர். மொரோக்கோவிலிருந்தே எமது மூதாதையர்கள் இலங்கைக்கு வந்தார்கள். தங்களது வியாபார நடவடிக்கைகளை சிறுகச் சிறுக கரையோரப் பகுதிகளில் மேற்கொண்டு வந்த காலத்திலேயே போர்த்துக்கேயர்கள் இலங்கைக்கு வந்தார்கள். அவர்களுடைய பிரதான நோக்கம் ஒன்று வியாபாரம், மற்றையது மதம். அவர்கள் இலங்கைக்கு வந்தபோது முஸ்லிம்கள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த காலமாக இருந்தது.

முஸ்லிம்களது வியாபார நடவடிக்கைகளை தம்வசப்படுத்த வேண்டுமெனில் அவர்களை அப்பிரதேசத்திலிருந்து அடித்து விரட்ட வேண்டியிருந்தது. ஆகவே முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் கரையோரப் பிரதேசங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். தொடர்ந்து முஸ்லிம்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டினுடைய உட்பகுதிக்கு வந்து கண்டி போன்ற மத்திய மாகாணங்களில் குடியேறத் தொடங்கினார்கள்.

அதன் பின்னர் ஒல்லாந்தர்கள் வந்தார்கள். அவர்களுடைய காலகட்டத்திலும் முஸ்லிம்கள் பழிவாங்கப்பட்டடார்கள். அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் வந்தார்கள். அப்போது மத்திய மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் கிழக்குப் பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள்.  

இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் இந்நாட்டு மன்னர்களுக்கு அல்லது பெரும்பான் மைக்கு எதிராக ஆயுதம் தூக்கிய வரலாறுகளோ அவர்களுக்கு எதிராகப் போராடிய வரலாறுகளோ இல்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய எழுச்சி, ஜேவிபி கிளர்ச்சி போன்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டிற்கு எதிராக ஆயுதம் தூக்கிய வரலாறுகள் இல்லை. ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையில் ஏற்பட்ட மதம் சார்ந்த நடவடிக்கைகளின் பின்னணியில் முஸ்லிம்கள் என்று அழைக்கப்பட்ட ஒரு சில குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு 22 லட்சம் முஸ்லிம்களையும் இக்கட்டான நிலைக்கு தள்ளி விட்டது மிகவும் மனவேதனையளிக்கின்றது. இதில் சில அரசியல் நடவடிக்கைகள் இருப்பதாக சில கருத்துக்கள் வந்தாலும் இந்நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கிகள். ஆகவே ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்கள்.

இதிலிருந்து விடுபட வேண்டுமானால் பல நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒன்று முஸ்லிம் மக்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். அது அரசியல் உள்ளிட்ட சகல விடயங்களிலும் இடம்பெற வேண்டும். கல்வி கற்ற ஒரு சமூகம் உருவாக வேண்டும். அதனூடாகத்தான் அநேகமான பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரம் எதிர்காலத்தில் சமூகத்தில் விட்டுக் கொடுக்கக் கூடிய சில விடயங்களில விட்டுக் கொடுப்புக்களை செய்ய வேண்டியிருக்கிறது.

பல்லின சமூகத்தைக் கொண்ட நாட்டில் வாழும் போது பெரும்பான்மை சமூகத்தின் விழுமியங்களையும் அனுசரிக்க வேண்டும். கரைந்து விடாமல் கலந்து  வாழ வேண்டும். குறிப்பாக முஸ்லிம்களுடைய நல்ல பண்புகளைக் காட்ட வேண்டும். இதுவரை காலமும் நாங்கள் அதைக் காட்டவில்லை. ஆகவே எங்களது முன்மாதிரிகளைச் சரியாக இந்த சமூகத்திற்குக் காட்ட வேண்டும். எம்மிடத்தில் நல்ல பண்புகள் வருவதற்கு சமூகம் படிக்க வேண்டும். சிறையிலுள்ள 28 வீதமான கைதிகள் முஸ்லிம்கள். 10 வீத சனத்தொகையில் 28 வீதம் சிறைக்கைதிகள். எமது சமூகம் எங்கே உள்ளது? சமூகத்தை வழிநடாத்தும் மிகப் பாரிய பொறுப் பொன்றுள்ளது.  

2 comments:

  1. "கரைந்து விடாமல் கலந்து வாழவேண்டும்"

    ReplyDelete
  2. இன்றைய முஸ்லிம்களுக்கு மிக மிக அவசியமானதொரு பேட்டி

    ReplyDelete

Powered by Blogger.