Header Ads



நாடெங்கிலுமுள்ள பாடசாலைகளில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படை அணிகள்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்  

எதிர்கால சந்ததியினரை ஒழுக்கமுள்ள சிறந்த தலைவர்களாக உருவாக்கும் நோக்கில் நாடெங்கிலுமுள்ள பாடசாலைகளில்  பொலிஸ் மாணவர் சிப்பாய் படை அணிகள் அமைக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மாணவர் சிப்பாய்  படையணியின் பிரதிப் பணிபாளரும் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பிரதிப் பணிப்பாளருமான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிந்தக குணவர்த்தன தெரிவித்தார்.

இந்த விஷேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுபது பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள படையணியில் இணைந்து கொண்ட மாணவர்களையும், பெற்றோர்களையும், பொறுப்பாசிரியர்களையும் சந்திக்கும் விஷேட நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் புதன்கிழமை (12.02.2020) நடைபெற்றது.

நிகழ்வில் படையணி செயற்பாடுகளில் திறமை காட்டிய பொலிஸ் மாணவர் சிப்பாய் படையணியின் மாணவர்களுக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ‪

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிந்தக குணவர்த்தன மேலும் உரையாற்றுகையில்,

பொலிஸ் திணைக்களம் நாடெங்குமுள்ள பாடசாலைகளில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படை அணிகளை உருவாக்கும் விசேட திட்டத்தை தற்போது திருப்திகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலில் மாவட்டங்கள் தோறும் மேற்பார்வை பொலிஸ் உத்தியோக்தரின் ஏற்பாட்டில் இந்த பொலிஸ் மாணவர் சிப்பாய் படையணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஏற்பாட்டுக்கமைய கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் இந்த மாணவர் சிப்பாய் படையணியினரை அமைக்கும் திட்டம் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

இந்த படையணியின் மட்டக்களப்பு மாவட்ட மேற்பார்வை பொலிஸ் அதிகாரி வை. கிளஸ்டன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண மேற்பார்வை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் எல்.பி. அஜித் பிரசன்ன, மட்டக்களப்பு தலைமை நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஆர். ஹெட்டியராச்சி, படையணி பயிற்சி உத்தியோகத்தர் எஸ். விஜிதா உட்பட பல பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள், இணைக்கப்பட்ட பல்வேறு பாடசாலைகளின் மாணவர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.