முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சு, அளவுக்கு அதிகமாகவே இடம்பெறுகிறது - ஐ.நா, மனித உரிமைகள் ஆணையாளர்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து விலகியமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இன்று பதிலளித்தார்.
சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரின் நான்காம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது.
இலங்கையின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் உரை தொடர்பில் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இன்று பதிலளித்தார்.
அவர் தெரிவித்ததாவது,
பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் மேற்கொண்ட மாறுபட்ட அணுகுமுறை குறித்து கவலையடைகின்றேன். அரசாங்கம் அனைத்து மக்களுக்காகவும் அனைத்து சமூகத்தினது தேவைகளுக்காகவும் செயற்பட வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினர் குறித்து செயற்பட வேண்டும். கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுள்ள அனுகூலமான முன்னேற்றத்தை இல்லாதொழிக்க வேண்டாம் என நான் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன். இலங்கையின் சுயாதீன நிறுவனங்கள் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் பலப்படுத்தப்பட்டமை ஜனநாயகக் கட்டமைப்பின் முக்கிய அம்சமாகும்.
சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சு, பாதுகாப்பு மற்றும் கொள்கை ரீதியிலான நடவடிக்கைகள் அளவுக்கு அதிகமாகவே இடம்பெறுகின்றன. பொறுப்புக்கூறலின் உள்ளக நடவடிக்கை கடந்த காலத்தில் தோல்வியடைந்துள்ளது. இதற்கான விசாரணைகளுக்காக மற்றுமொரு ஆணைக்குழுவை நியமிப்பதில் நம்பிக்கை கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுவதே அதன் பெறுபேறாக அமையும். இலங்கையின் அனைத்து சமூகத்தினருக்கு எதிராகவும், கடந்த காலங்களைப் போன்று மீண்டும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இந்த நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு நான் பேரவையை வலியுறுத்துகின்றேன்.
என மிச்செல் பச்சலெட் குறிப்பிட்டார்.
இதேவேளை, 30/1 மற்றும் 40/1 பிரேரணைகளிலிருந்து வெளியேறுவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் தாரிக் அஹமட் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான அணுகுமுறையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கவலையடைவதாக, கனேடிய வெளிவிவகார அமைச்சர் Philippe Champagne தெரிவித்துள்ளார்.
முன்னேற்றகரமான மற்றும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment