Header Ads



அதாவுல்லா வெற்றி பெறுவாரா..? சாய்ந்தமருது கைகொடுக்குமா...??

அரசியல் என்பது அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த உலகு. அங்கு எதுவும் சாத்தியமாகலாம். மரணித்தவர்கள் ‘எழுந்து வந்து’ தேர்தல்களில் வாக்களிக்கும் ஆச்சரியங்களை நாம் கண்டதில்லையா? வெல்வார் என்று நம்பப்படுவோர் தோற்பதும் “இனி அவர் அவ்வளவுதான்” என்று சொல்லப்படுவோர் மீண்டெழுவதும், அரசியல் உலகில் அடிக்கடி நடக்கும் அதிசயங்களாகும். பல வருடங்களுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் தொடர்ச்சியாகப் பதவி வகித்துவந்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கடந்த பொதுத் தேர்தலில் தோற்றுப்போன போது, அவரின் அரசியல் வாழ்க்கை ‘முடிவுக்கு’ வந்து விட்டதாகவே பலரும் பேசிக் கொண்டனர்.

அதாஉல்லாவின் அரசியல் வானில், இனியொரு ‘ஒளிக்கீற்று’ தோன்றும் என்கிற நம்பிக்கையை, அவரின் ஆதரவாளர்களிலும் கணிசமானோர் இழந்திருந்தனர்.  ஆனால், அரசியல் தனது விசித்திரத்தை காட்டத்தொடங்கியது. ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவினது வெற்றியின் மூலம், அதாவுல்லாவின் அரசியல் வானில் ஒரு ‘வெளிச்சம்’ தெரியத் தொடங்கியுள்ளது.  இது, அதாவுல்லாவுக்கும் அவரது  ஆதரவாளர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவுல்லா மீண்டும் நாடாளுமன்றம் செல்வார் என்று, அவரது தரப்பு நம்புகிறது.

அதாவுல்லாவின் முதல் தோல்வி
கடந்த ஆட்சியானது முஸ்லிம் காங்கிரஸுக்கு ‘வசந்த காலம்’ என்று, அந்தக் கட்சியின் தலைவர் ரஹூப் ஹக்கீம் அடிக்கடி கூறிவந்த போதிலும், அதாஉல்லாவின் சொந்த ஊரான அக்கரைப்பற்றில் அமையப் பெற்றுள்ள மாநகர சபையையும் பிரதேச சபையையும், முஸ்லிம் காங்கிரஸால் கைப்பற்ற முடியவில்லை. வழமைபோன்று அந்த சபைகளை அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸே கைப்பற்றிக்கொண்டது. ஆனால், அம்பாறை மாவட்டத்தில் சுமார் பல வருடங்கள் அமைச்சராக இருந்துவந்த அதாஉல்லா, தனது அரசியலை அக்கரைப்பற்றுக்கு வெளியில் வளர்ப்பதற்குத் தவறி விட்டார் என்கிற விமர்சனங்கள் பரவலாக உள்ளன. அவர் அதிகாரத்தில் இருந்தபோது, கட்சி அரசியலை வளர்ப்பதில் பொடுபோக்காகவும் சோம்பேறித்தனத்துடனும் செயற்பட்டார். அவருக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு, கிட்டத்தட்ட அற்றுப்போயிருந்தது. தொடர்ச்சியான அரசியல் வெற்றி, அவருக்கு ஒருவகையான ‘கர்வக் காய்ச்சலை’ ஏற்படுத்தியிருந்தது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிப்பதென அதாவுல்லா எடுத்த முடிவு, அவரின் 20 வருட நாடாளுமன்ற வாழ்க்கைக்கு, முதன் முதலாகத் தோல்வியைச் சந்திக்கும் நிலைவரத்தை உருவாக்கியது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், 16,771 விருப்பு வாக்குகளை மட்டுமே அதாவுல்லா பெற்றார். அதனை அவரது  எதிராளிகளே எதிர்பாக்கவில்லை. அந்தத் தேர்தல் அவருக்கு மிக மோசமானதொரு படுதோல்வியாக அமைந்தது.  அதாவுல்லா இதுவரையில், 05 பொதுத் தேர்தல்களைச் சந்தித்திருக்கின்றார். அவற்றில், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டுமே அவர் தோல்வியடைந்தார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், 36,643 விருப்பு வாக்குகளைப் பெற்று அதாவுல்லா வெற்றி பெற்றிருந்தார்.

மீண்டும் ஹீரோ
கடந்த பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ அணியின் பக்கமாக அதாவுல்லா இருந்தமையால்தான், அவர் தோல்வியடைந்தார் என்பது ஓரளவு உண்மையாகும். ஆனால், தற்போதைய ஆட்சியில் அதாவுல்லா மீண்டும் ‘ஹீரோ’ ஆக மாறுவற்குக் காரணமாகவும் கடந்த தேர்தலில் மஹிந்தவை அவர் ஆதரித்தமைதான் காரணமாக உள்ளது.   2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றதையடுத்து, முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் சோர்ந்துபோய் விட்டன. அதேசமயம், அதாவுல்லா தரப்புக்கு கோட்டாவின் வெற்றி பெரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து, தனது கட்சி அரசியலை வளர்த்தெடுப்பதற்காக, அதாஉல்லா மிகத் தீவிரமாகக் களமிறங்கியுள்ளார்.

உதுமாலெப்பையின் பிரிவு
அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸுக்கு அண்மையில் ஏற்பட்ட இழப்பாக, அந்தக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமையில் இருந்துவந்த கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அந்தக் கட்சியை விட்டும் பிரிந்து சென்றமை எனக் கூறப்படுகிறது.  கடந்த பொதுத் தேர்தல்களில், அதாஉல்லா பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளில் கணிசமானவை, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உதுமாலெப்பை பெற்றுக் கொடுத்தவையாகும். உதுமாலெப்பையின் பிரிவானது, தேசிய காங்கிரஸின் வாக்கு வங்கியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியதை மறுக்க முடியாது. மறுபுறமாக, தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற உதுமாலெப்பை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ளார். ஆனால், அவருக்கு தேசிய காங்கிரஸில் கிடைத்த ‘இடம்’ முஸ்லிம் காங்கிரஸில் இல்லை என்கிற கருத்தும் நிலவுகிறது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவரும் முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீருக்கு அடுத்தபடியாகவே, உதுமாலெப்பைக்கான அரசியல் ‘இடம்’ முஸ்லிம் காங்கிரஸில் உள்ளது. அரசியலிலும் வயதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரை விடவும் உதுமாலெப்பை மூத்தவராவார். 

தேசிய காங்கிரஸை விட்டுப் பிரிந்தமையானது, உதுமாலெப்பையின் அரசியலுக்கும் நட்டம்தான். தேசிய காங்கிரஸில் அவர் இருந்த காலமெல்லாம், ஒரு எலிக்கு ‘தலை’ போலாயினும் இருந்தார். ஆனால், முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டதன் பின்னர் அவர், புலிக்கு ‘வால்’ போல் ஆகிவிட்டார் என்கிற விமர்சனமும் உள்ளது. அந்த வகையில், தேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை பிரிந்தமையானது, அதாஉல்லாவுக்கு மட்டுமன்றி உதுமாலெப்பைக்கும் அரசியல் ரீதியாக பெரும் நட்டமாகும்.  உதுமாலெப்பையின் இழப்பை ஈடுசெய்யும் பொருட்டு, உதுமாலெப்பையின் சொந்த ஊரான அட்டாளைச்சேனையில், தேசிய காங்கிரஸை வளர்த்தெடுப்பதற்கான தீவிர முயற்சிகளில் அதாவுல்லா தரப்பு இறங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரான பழீல் பி.ஏ என்று அறியப்படுகின்ற எஸ்.எல்.எம்.பழீல் என்பவரை, முஸ்லிம் காங்கிரஸிருந்து பிரித்தெடுத்து, தமது தேசியக் காங்கிரஸில் அதாஉல்லா தரப்பு இணைத்திருக்கிறது. ஆனால், உதுமாலெப்பையின் பிரிவால், தேசிய காங்கிரஸின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவை, பழீலின் இணைவால் சரிக்கட்ட முடியாது. இருந்தபோதும், “முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பழீல் பிரிந்தார்” என்பது, உள்ளுர் அரசியலில் ஓர் அதிர்வான செய்தியாகும். 

சாய்ந்தமருது - நழுவி விழுந்த பழம்
எதிர்வரும் பொதுத் தேர்தலைக் குறிவைத்தும் அதனூடாகத் தனது நாடாளுமன்றப் பதவியைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடனும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கி, மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார். இந்தச் சூழ்நிலையில், பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல், அதாவுல்லாவின் அரசியலில் ஓர் அதிஷ்டம் அடித்திருக்கிறது. தமக்கான உள்ளுராட்சி சபையொன்றை மிக நீண்ட காலமாகக் கோரிவரும் சாய்ந்தமருது பிரதேசத்தின் பள்ளிவாசல் தரப்பு, அதாவுல்லாவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவை வழங்குவதற்கு முன்வந்திருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ‘சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை வழங்குவேன்’ என ராஜபக்‌ஷ தரப்பு வாக்குறுதி வழங்கியதை அடுத்து, அந்தத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு சாய்ந்தமருதின் ஆதரவை வழங்குவதென, அப்பிரதேசத்தின் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகம் தீர்மானித்தது. 

இந்தப் பின்னணியில், தற்போது கல்முனை மாநகர சபையின் கீழுள்ள பிரதேசங்களை எல்லையிட்டு 04ஆகப் பிரித்து, அவற்றுக்கு மொத்தமாக 04 உள்ளுராட்சி சபைகளை வழங்குவதென்கிற முடிவுக்கு தற்போதைய அரசாங்கம் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருது நகரசபை, தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு சபை மற்றும் மருதமுனை பிரதேசத்தை உள்ளடக்கிய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மற்றொரு சபை ஆகியனவே, மேற்கூறப்பட்ட நான்கு சபைகளுமாகும். அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இவ்வாறு 04 சபைகளை உருவாக்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், தமது பிரதேசத்துக்கான உள்ளூராட்சி சபையைப் பெற்றுத் தருவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டு வரும் அதாவுல்லாவை, அரசியல் ரீதியாக ஆதரிப்பது எனும் முடிவுக்கு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் வந்துள்ளது. ஏற்கனவே, இலங்கை நிர்வாகச் சேவை அதிகாரியாகக் கடமையாற்றிய நிலையில், தனது சொந்த விருப்பில் ஓய்வுபெற்றுள்ள ஏ.எல்.எம்.சலீம் என்பவரை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சாய்ந்தமருது சார்பாகக் களமிறக்கும் முடிவையும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் எடுத்துள்ளது,

மேற்படி சலீம், ஆளுந்தரப்பு வேட்பாளராக அதாஉல்லாவின் அணி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலிலே களமிறங்குவார் என்கிற எதிர்பார்ப்புகளும் உள்ளன. கடந்த ஆட்சியில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைப் பெற்றுத் தருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பல்வேறு தடவை வாக்குறுதிகளை வழங்கியிருந்ததோடு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூலமாகவும், கல்முனையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை வழங்கப்படும் என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வாக்குறுதி வழங்கச் செய்திருந்தார்.

ஆனாலும், சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையொன்றை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொடுக்கவேயில்லை. சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையொன்றைப் பெற்றுக் கொண்டுப்பதில் கல்முனையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸுக்கு உடன்பாடு இல்லை என்பதால், மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைப் பெற்றுக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இந்த நிலையில்தான், சாய்ந்தமருதின் உள்ளுராட்சி சபைக்கான கோஷத்தை வென்று கொடுப்பதற்கு, அதாவுல்லா முன்வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம், சுமார் 19 ஆயிரம் வாக்காளர்காளர்களைக் கொண்ட சாய்ந்தமருது பிரதேசத்தின் பெரும்பான்மை ஆதரவு, தனக்குக் கிடைக்கும் என அதாஉல்லா நம்புகிறார்.

ஆச்சரியம் நிகழுமா? 
எதிர்வரும் பொதுத் தேர்தலில், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா போட்டிடுவதாயின், அவர் பொதுஜன பெரமுன சார்பாகவே களமிறங்குவார். தாமரை மொட்டுச் சின்னத்தில்தான் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன களமிறங்கும் என்று, நாமல் ராஜபக்‌ஷ சில தினங்களுக்கு முன்னர் கண்டியில் வைத்துக் கூறியிருக்கின்றார். நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மொட்டுச் சின்னத்தில் அதாவுல்லா போட்டியிட்டாலும், அவர் 45 ஆயிரத்துக்குக் குறையாத விருப்பு வாக்குகளைப் பெறவேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்ட அதாவுல்லா, 16,771 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்த அதேவேளை, அதே கட்சி சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விமலவீர திஸாநாயக்க, 53,537 விருப்பு வாக்குகளையும் ஸ்ரீயாணி 49,691 விருப்பு வாக்குகளையும் பெற்றிருந்தனர். 

எனவே, 45 ஆயிரத்துக்குக் குறையாத விருப்பு வாக்குகளை அதாவுல்லா இம்முறை எப்படிப் பெறுவார் என்கிற கேள்வியும் அரசியலரங்கில் உள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதாவுல்லா போட்டியிடுவதைத் தவிர்த்து, பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் முடிவை எடுப்பது, அவருக்கு நல்லது என்கிற கருத்துகளும் உள்ளன. 

கடந்த பொதுத் தேர்தல் காலத்துடன் ஒப்பிடும்போது, அதாவுல்லாவினுடைய அரசியலின் பக்கமாக, தற்போது சாதகமாக காற்று வீசுவதைக் கணிக்க முடிகிறது. ஆனால், இந்தச் சாதக நிலைவரமானது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வென்றெடுப்பதற்கான சாத்தியத்தை அதாவுல்லா அணிக்கு ஏற்படுத்திக் கொடுக்குமா என்கிற கேள்வியும் உள்ளது.  கடந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபாய ராஜபக்‌ஷ பெற்ற வெற்றி என்பது, அதாவுல்லாவின் வெற்றி என, அதாவுல்லாவின் தரப்பினரில் பெரும்பாலானோர் தவறாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை நோக்கி நகர்வதற்கான சாத்தியங்களை, கோட்டாவின் வெற்றியானது அதாஉல்லாவுக்கு ‘கொஞ்சம்’ அதிகப்படுத்தியுள்ளது என்பதை, அதாவுல்லா தரப்பு புரிந்து கொள்தல் அவசியமாகும்.  அந்தப் புரிதலுடன் அதாவுல்லா தரப்பு களத்தில் இறங்கி ‘தீயாக’ வேலை செய்யும்போது, சில அதிசயங்கள், ஆச்சரியங்கள் நடக்கக்கூடும். முகம்மது தம்பி மரைக்கார்

1 comment:

Powered by Blogger.