ஹஜ் யாத்திரை 5 இலட்சம் ரூபாவுக்கு முகவர்கள் இணங்கவும், பிரதமர் தெரிவிப்பு
ஹஜ் குழுவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் நேற்று -13- அலரி மாளிகையில் நடைபெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.
இந்நிலையில் இன்று பிற்பகல் நான்கு மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஹஜ் குழு மற்றும் ஹஜ் முகவர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதன்போது இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை 5 இலட்சம் மற்றும் 6 ½ இலட்சம் ஆகிய இரண்டு ஹஜ் பொதிகளின் (Package) அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்ற இறுதித் தீர்மானத்தை பிரதமர் அறிவிக்கவுள்ளார்.
குறித்த தீர்மானத்தை ஹஜ் முகவர்கள் சங்க பிரதிநிதிகளிடம் பிரதமர் இன்றைய கூட்டத்தில் முன்வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசின் குறிப்பிட்ட ஹஜ் பொதிகளுக்கு ஹஜ் முகவர்கள் இணக்கம் தெரிவித்தால் ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு முகவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முகவர்கள் பிரதமரின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுமென ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பழீல் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் அரசாங்கத்தின் மூலமே மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஹஜ் முகவர்களின் சங்கம் தங்களது ஹஜ் ஏற்பாடுகளுக்கான செயற்றிட்டத்தை நேற்று முன்தினம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் கையளிப்பதாக தெரிவித்திருந்தாலும் அத்திட்டம் நேற்று முன்தினம் கையளிக்கப் படவில்லை எனவும் ஹஜ் குழு தெரிவித்தது.-Vidivelli
ஏ.ஆர்.ஏ. பரீல்
Post a Comment