2 ஹஜ் (Package) அறிமுகம் - பிரதமரே இறுதித் தீர்மானம் மேற்கொள்வார்
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை -13- தனது இறுதித் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளார். அரச ஹஜ் குழுவும், ஹஜ் முகவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் நேற்று முன்தினம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினர். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
அரச ஹஜ் குழுவினால் ஹஜ் முகவர்களுக்கு இரு வேறுபட்ட ஹஜ் பொதி (Package) அறிமுகப்படுத்தப்பட்டது. அரச ஹஜ் குழு இதன் அடிப்படையிலே ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிட்டஇரு வேறுபட்ட பெக்கேஜ்களில் அரச ஹஜ் குழு வரையறுத்துள்ள நிபந்தனைகள், வசதிகளின் கீழ் ஹஜ் முகவர்கள் ஹஜ் ஏற்பாடுகளுக்கு இணக்கம் தெரிவித்தால் பிரதமருடன் கலந்துரையாடி பிரதமரும் இணக்கம் தெரிவித்தால் ஹஜ் ஏற்பாடுகள் முகவர்களுக்கு வழங்கப்படும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
5 இலட்சம் ரூபா கட்டணத்தில் ஒரு ஹஜ் பொதியும், 6 ½ இலட்சம் ரூபா கட்டணத்தில் மற்றுமோர் ஹஜ் பொதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 இலட்சம் ரூபா ஹஜ் பொதி 30 நாட்களைக் கொண்டதும் துல்கஃதா 15 இல் ஆரம்பித்து துல்ஹஜ் 15 வரையாகும். 6 ½ இலட்சம் ரூபா கட்டணத்திலான ஹஜ் பொதி துல்ஹஜ் 4 இல் ஆரம்பித்து துல்ஹஜ் 24 இல் நிறைவுறும் ஹஜ் பொதியாகும். இது 20 நாட்களைக் கொண்டதாகும்.
இலங்கையிலிருந்து அழைத்துச் செல்லப்படும் ஹஜ் யாத்திரிகர்கள் மக்காவில் ஹரம் ஷரீபுக்கு 300 மீற்றர் எல்லைக்குள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட வேண்டும். மதீனாவிலும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட வேண்டும். மினாவில் B பிரிவு முஅல்லிம் கூடாரத்தில் தங்கவைக்கப்பட வேண்டும் உட்பட பல வசதிகள் நிபந்தனையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் தொடர்பில் ஹஜ் முகவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.எம்.அஹமட் நிஜாரை தொடர்பு கொண்டு வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
ஹஜ் குழு சவூதி அரேபியாவுக்கு சென்று முஅல்லிம் சம்மேளனத்துடன் கலந்துரையாடியிருக்கிறது. ஹஜ் குழுவுக்கு சவூதி விமான சேவை பயணச் சீட்டு 2000 ரியால்களுக்கு வழங்கப்படவுள்ளது.
ஆனால் இலங்கையில் நாம் இதற்காக 3000 ரியால் பயணச்சீட்டுக்கு மாத்திரம் செலுத்த வேண்டியுள்ளது. இதேபோன்று மினாவில் கூடாரத்திற்கு (B பிரிவு) நாம் 2000 ரியால் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் இந்தக் கட்டணம் ஹஜ் குழுவுக்கு 1500 ரியாலுக்கு வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹஜ் குழு குறிப்பிட்டுள்ள கட்டணங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது.
ஆனால் ஹஜ் குழு சில அனுபவமுள்ள முகவர்களைத் தெரிவு செய்து ஹஜ் கோட்டாவை அதிக எண்ணிக்கையில் வழங்கினால் குறிப்பிட்ட கட்டணத்தில் ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும். இந்நிலையில் ஏனைய ஹஜ் முகவர்களின் நிலை குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது என்றார்.
நாளை வியாழக்கிழமை அரச ஹஜ் குழு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளது. ஹஜ் முகவர் சங்கம் முன்வைக்கும் ஆலோசனைகளும் சிபாரிசுகளும் பிரதமரிடம் கையளிக்கப்படும். பிரதமரே இறுதித் தீர்மானம் மேற்கொள்வார் என ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.-Vidivelli
ஏ.ஆர்.ஏ.பரீல்
Post a Comment