பயங்கரவாதி சாஹரானின் தாக்குதல் - மனோகணேசனிடம் CID விசாரணை
கொழும்பில் வீடுகள் தோறும் பொலிசார் மேற்கொண்ட விபரக்கோவை திரட்டு என்ற பொலிஸ் பதிவை ஏன் தடுத்து நிறுத்தினீர்கள்? இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு குற்றவாளிகளை முன்கூட்டியே கண்டு பிடிக்க முடியாமல் போனதை ஏற்றுக்கொள்கிறீர்களா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனிடம் விசாரணையை மேற்கொண்டுள்ள குற்றவியல் புலனாய்வு திணைக்கள பொலிஸ் அதிகாரிகள், எம்பியின் வீட்டுக்கு வந்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மனோகணேசன்,
கொழும்பில் தமிழர் செறிந்து வாழும் கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, மட்டக்குளிய, முகத்துவாரம், கொள்ளுப்பிட்டி, தெகிவளை, கல்கிசை, கொகுவளை, கிருலபனை, தெமட்டகொடை, மருதானை, புறக்கோட்டை மற்றும் கொழும்புக்கு வெளியே வத்தளை, நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் வலய பிரதேசங்களை குறிவைத்து பொலிசார், விபரக்கோவை திரட்டு என்ற பொலிஸ் பதிவை மேற்கொள்ள முயற்சிப்பது, காலம் காலமாக நடைபெறும் கைங்கரியமாகும். இதை நான் எப்போதும் எதிர்த்து தடுத்து நிறுத்தியிருக்கிறேன். இதற்கு முந்தைய மகிந்த ஆட்சியிலும் சரி, அதற்கு பின் வந்த நமது ஆட்சியிலும் சரி, இதற்கு நான் இடம் கொடுத்ததே இல்லை.
சந்தேக நபர்கள் மீது விசாரணை மேற்கோள்வது ஒன்று. ஆனால், அனைத்து வீடுகளுக்கும் சென்று விபரக்கோவை திரட்டுவதும், அதிலும் தமிழ் குடும்பங்களை குறி வைப்பதும் இன்னொன்று. பொலிசார் திரட்டும் விபரக்கோவைகள், மூன்றாம் தரப்பு சமூக விரோதிகளிடம் சென்று சேருவதாக நான் சந்தேகப்படுகின்றேன். இதை நான் அனுமதிக்க முடியாது.
இந்நிலையில், பொலிஸ் பதிவை நான் தடுத்து நிறுத்தியதால்தான், உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு குற்றவாளிகளை முன்கூட்டியே கைது செய்ய முடியாமல் போனது என்ற குற்றச்சாட்டை, அவ்வேளை கொழும்பில் பிரதி பொலிஸ் அதிபராக இருந்தவர், ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பில் விசாரித்து வரும் விசேட விசாரணை குழுவிடம், எனக்கு எதிராக தெரிவித்துள்ளார்.
இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் குற்றவியல் விசாரணை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமராச்சி திலகரத்ன, என்னிடம் விசாரணை வாக்குமூலம் பெறவேண்டும் என அறிவித்து நேரம் கோரி இருந்தார். அதிகாரிகளை எனது வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெறும்படி நான் கூறியிருந்தேன். இதன்படி சிஐடி பிரதம பரிசோதகர் ஹெல உடகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் என் வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.
எனது வாக்கு மூலத்தில் “இது மொட்டந்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடும் வேலை. கடைசியாக கொழும்பில் தமிழ் மக்களை நோக்கிய பொலிஸ் பதிவுகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது, கடந்த வருடம் ஜனவரியில் என எனக்கு ஞாபகம் இருக்கின்றது. அப்போது, இதுபற்றி வழமைப்போல், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதி பொலிஸ் மாதிபர், பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடன் மட்டுமல்ல, பொலிஸ் துறையை தன் கையில் வைத்திருந்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் அமைச்சரவையில் இந்த விடயத்தை எழுப்பி, விவாதித்து இருந்தேன். சந்தேக நபர்கள் மீது விசாரணை மேற்கொள்ளுங்கள். ஆனால், வீடு வீடாக, குற்றவாளிகளை போன்று, தமிழரை தேடி சென்று ஒட்டுமொத்தமாக பொலிஸ் பதிவு செய்யும் நடைமுறையை உடன் முடிவுக்கு கொண்டுவரும்படி கூறி இருந்தேன். அதன்படி அது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.”
“இது நடந்து, நான்கு மாதங்களுக்கு பின்னரே ஏப்ரல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்புக்கு வந்த நபர்கள் கொழும்பில் ஜனவரி மாதமே வந்து தங்கி இருந்திருப்பார்கள் என்பது நம்ப முடியாத பழிவாங்கல் சிந்தனை. உண்மையில், இந்த குண்டு வெடிப்பு தொடர்பிலும், குண்டு வெடிப்பு பயங்கரவாதி சாஹரான் கும்பல் தொடர்பிலும், நட்பு நாடு என்ற முறையில் இந்திய புலனாய்வு துறை முன்கூட்டிய தகவல்களை இலங்கை பொலிஸ் துறைக்கு வழங்கி இருந்தது. குண்டு வெடிப்பு நிகழ சில மணிகளுக்கு முன்கூட இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களை வழங்கி இருந்தது. இத்தகவல்களை இலங்கை குற்றவியல் புலனாய்வு திணைக்களம் தேடி கண்டுபிடிக்கவில்லை. இந்திய புலனாய்வு துறையே இலங்கைக்கு கொடுத்தது. இப்படி கொடுக்கப்பட்ட துல்லியமான தகவல்களைகூட சரியாக பயன்படுத்தி, குற்றங்களை தடுத்து நிறுத்தி, அப்பாவி மக்களை காப்பாற்றி, குற்றவாளிகளை கைது செய்ய, இலங்கை பொலிசாரால் முடியவில்லை. சம்பவம் நடைபெற்ற பொலிஸ் வலய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதி பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் துறையை தன் கையில் வைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தம் கடமைகளில் இருந்து முற்றாக தவறியுள்ளனர். தமது கடமை தவறலை மறைக்கவே, நம்பி வாக்களித்த மக்களுக்காக கடமையை செய்யும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான என் மீது திட்டமிட்டு பழிவாங்கும் முகமாக அபாண்டமாக இந்த குற்றம் சாட்டப்பட்டுள்ளது.”
எனக்கூறி, எனது வாக்குமூலத்தை எழுத வைத்து, கையெழுத்திட்டு கொடுத்தேன் என தெரிவித்தார்.
Post a Comment