அஸாத் சாலி தொடர்பில், விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்
(இராஜதுரை ஹஷான்)
தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஆத் அமைப்பில் நீதிபதிகளும் உறுப்பினர்களாக உள்ளார்கள் என குறிப்பிட்ட முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேவர்தன குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று 27 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.கடந்த அரசாங்கத்தில் மரகறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவில்லை.
விலையேற்றம் உள்ளிட்ட சாதாரண காரணிகளை கருத்திற் கொண்டு பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்கவில்லை. தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும்.
ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் கடந்த அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. கைது செய்வதற்கு உரிய காரணிகள் இருந்தும் அரசாங்கத்தில் பதவி வகித்தவர்கள் கைது செய்யப்படவில்லை மாறாக பாராளுமன்ற தெரிவு குழுவின் ஊடாக அவர்கள் குற்றமற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் மற்றும் மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் குற்றமற்றவர்களாக கருதப்பட்டார்கள்.
தடை செய்யபபட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஆத் அமைப்பில் நீதிபதிகள் உறுப்பினர்களாக உள்ளதாகவும், ஒரு பிரதேசத்தில் பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு பிரதேச சபை மறுப்பு தெரிவித்த போது பள்ளிவாசலை கட்டுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பல தரப்பில் முறைப்பாடுகளை முன்வைத்தோம். ஆனால் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. நீதிபதிகள் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட கருத்துகள் மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளன. ஆகவே இவரது கருத்து தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
Post a Comment