முஸ்லிம்களும்,, மூன்றிலிரண்டு பெரும்பான்மையும்
இலங்கை முஸ்லிம்களின் வாழ்வும் அரசியலும் இந்த நாட்டின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாதவாறு இப்போது பெரும் பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளன. அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம், தொழில் வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம், மத வழிபாடு, கல்வி அபிவிருத்தி, சமூகப் பண்பாடுகளும் கலாசாரமும் என்ற இன்னோரன்ன துறைகளிலெல்லாம் பாரிய பிரச்சினைகள் பெருகிக்கொண்டு போகின்றனவேயன்றி குறைவதாகத் தெரியவில்லை.
முஸ்லிம் தலைமைத்துவமோ இப்பிரச்சினைகளைப்பற்றி பொது மேடைகளிலே ஒப்பாரி வைக்கிறதேயன்றி இவற்றிற்கு என்ன பரிகாரம் என்பதைப்பற்றி உருப்படியான சிந்தனைகளையோ திட்டங்களையோ இதுவரை முன்வைத்ததாகத் தெரியவில்லை. அவர்கள் சொல்வதை எல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒன்றேயொன்று புலப்படுகின்றது. அதாவது, எங்களை எப்படியாவது நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள், நாங்கள் உங்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என்பதாகும். அவ்வாறு அவர்களை அனுப்பினாலும், அவர்கள் போராடப்போகும் உரிமைகள் எவை என்பதையாவது பட்டியலிட்டு இதுவரை பகிரங்கமாக கூறியிருக்கிறார்களா? அல்லது, இதுவரை அவர்கள் சமூகத்துக்காகச் சாதித்ததென்ன என்பதையாவது வெளியிடுவார்களா? இன்றுவரை ஏமாற்றியவர்கள் நாளையும் ஏமாற்றமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி? எனினும், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இந்த ஆஷாடபூதிகளை நம்பி முஸ்லிம்கள் இன்னும் காலங்கடத்த வேண்டுமா?
மேற்கூறியவற்றைப் பின்புலமாகக்கொண்டு இக்கட்டுரை முஸ்லிம்களை அண்மிக்கும் இன்னுமொரு பேராபத்தைப்பற்றி விபரிக்க முனைகின்றது. இது முஸ்லிம்களை மட்டுமல்ல, தமிழினத்தையும் எதிர்நோக்கியுள்ளது. 1950களிலிருந்து அரசியலுக்குள் புகுந்த பௌத்தம் படிப்படியாக அரசியலாதிக்கம் பெற்று 2009இல் உள்நாட்டுப் போர் முடிவுற்றதுடன் ஓரு பேராதிக்க வெறியாக வளர்ந்து வருகின்றது. ஆதிக்கத்துக்கும் பேராதிக்கத்துக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை உணர முடியுமானால் முஸ்லிம்களும் தமிழர்களும் எதிர்நோக்கும் பேராபத்தை அறிந்து கொள்ளலாம்.
இலங்கை பல்லினமக்கள் வாழும் ஒரு வளமுள்ள நாடு. அந்த பல்லினக் கலவைக்குள் பௌத்தர்கள் பெரும்பான்மையினர். அதே பௌத்த பெரும்பான்மைக்குள் அடங்கி இருப்பவர்கள் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது வீதத்தினர் சிங்கள இனத்தவர். இந்த யதார்த்தத்தை மற்ற எல்லா இனங்களும் ஏற்றுக்கொள்கின்றன. ஆகவே, அரசியலடிப்படையில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு பௌத்தர்களால் தமது மதத்துக்கும், கலாசாரத்துக்கும், இனத்துக்கும் அதிக நன்மைகளைப் பெறுவதைத் தவிர்க்க முடியாது. மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு ஜனநாயக ஆட்சிமுறையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது பௌத்த ஆதிக்கத்தைப் பாதிக்கப் போவதில்லை. மதச்சார்பற்ற இடதுசாரிகளே அரசாங்கம் அமைத்தாலுங்கூட பௌத்தத்தின் அரசியல் செல்வாக்கினை தடுக்க முடியாது. சிங்கள மொழி உத்தியோகபூர்வ மொழியாய் இருப்பதும், யாப்பிலே பௌத்தம் முதன்மை இடத்தை பெற்றிருப்பதும் இப்பலத்தினாலேயே. ஓர் இடதுசாரி அமைச்சர்தான் அவர் வரைந்த யாப்பிலே பௌத்தத்துக்கு முதன்மை இடத்தை வழங்கினார் என்பது இதனை உறுதிப்படுத்தவில்லையா?
இருந்தும் இன்று பூதாகரமாக வளர்ந்துவருதோ வேறொன்று. பௌத்த பெரும்பான்மையை அடித்தளமாகக்கொண்டு பௌத்த பேராதிக்கவாதம் தலைதூக்கியுள்ளது. இது பேராபத்தான ஒரு விளைவு. இப்பேராதிக்கத்தை உருவாக்க வேண்டுமென முயற்சிப்போரின் நோக்கில் இலங்கையில் பௌத்தமே ஒரே மதம், பௌத்த சிங்களவர்களே ஒரே இனம், அவர்களின் மொழியே ஒரே மொழி, அவர்களின் சட்டமே ஒரே சட்டம் என்ற நிலைப்பாடு வேரூன்றியுள்ளது. சுருக்கமாகக் கூறினால் பேராதிக்கவாதிகளின் கருத்தில் பௌத்த சிங்களவர்களே இந்நாட்டு மன்னர்கள். அவ்வாறாயின் சிறுபான்மையினர் கதி? அவர்கள் வெறுமனே பௌத்த பெரும்பான்மையின் தயவில் வாழும் சாதாரண குடியானவர்கள் மட்டுமே. வேறுவிதமாகக் கூறின், வீட்டுக்குச் சொந்தக்காரர் பௌத்த சிங்களவர்கள், அதிலே வாடகைக்குக் குடியிருப்பவர்கள் சிறுபான்மை இனத்தவர். அவர்கள் கொடுக்கும் வாடகை பெரும்பான்மையினருக்குக் குற்றேவல் புரிவது.
இக்கொள்கைகளின் தொனியை வெளிப்படையாகவே பேராதிக்கவாதி ஞானசார தேரர் கடந்த வருடம் கண்டி மாநகரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான அவரது சகதுறவிகளின் மத்தியில் மீட்டி வாசித்ததை வாசகர்கள் பத்திரிகைகளில் படித்திருக்கலாம். இப்பேராதிக்கவாதத்தின் ஒரே நோக்கம் இந்த நாட்டை அதன் சர்வ துறைகளிலும் பௌத்தமயமாக்குகின்றதாகும். இன்று நாடாளுமன்றத்திலே முஸ்லிம்களின் விவாக விவாகரத்துச் சட்டத்தினை முற்றாக நீக்கவேண்டுமென்ற பிரேரணையை ரதன தேரர் கொண்டுவந்திருப்பதும் இந்த நோக்கத்தினாலேயே. அதிஷ்டவசமாக, இவர்களின் வலைக்குள் இந்நாட்டின் எல்லா பௌத்த மக்களும் சிக்கவில்லை. தேசப்பற்றும், மனிதாபிமானமும், ஜனநாயக வேட்கையும், யதார்த்த சிந்தனையும் கொண்ட இலட்சக்கணக்கான பௌத்த சிங்கள மக்கள் இன்னும் இந்த நாட்டில் வாழ்கின்றனர். ஆனால் அவர்களையும் தம்வலைக்குள் சிக்கவைக்க பேராதிக்கவாதிகள் துடியாய்த் துடிக்கின்றனர்.
இப்பேராதிக்கவாதிகளின் கனவு நனவாகுமா? நனவாகக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இப்போது உருவாகியுள்ளது. இதை முஸ்லிம்கள் உணர்ந்து அதற்கேற்ப செயற்படல் வேண்டும். அதற்கு முன்னர் இன்னொரு உண்மையையும் விளங்கிக் கொள்ளவேண்டும்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ அடைந்த வெற்றி பேராதிக்கவாதிகளின் வெற்றி என்பதை அத்தேர்தலை நுணுக்கமாக ஆராய்ந்தவரெவரும் மறுக்க முடியாது. ஐம்பத்திரண்டு சதவீத வாக்குகளைப்பெற்று அமோக வெற்றியை அவர் ஈட்டியபோதும், அந்த வாக்குளில் மிகப் பெரும்பான்மையானவை சிங்கள மக்களின் வாக்குகளாயினும், அந்த வாக்குகளைத் திரட்டிக் கொடுத்தவர்கள் பௌத்த பேராதிக்கவாதிகளே. தான் சிங்கள மக்களின் வாக்குகளைக் கொண்டுதான் வெற்றிபெற்றேன் என கோத்தாபய கூறினாலும் அந்தக் கூற்றுக்குள் ஒளிந்து கொண்டிருப்பது பேராதிக்கவாதிகளின் ஆதரவு என்பதை அவரால் மறுக்க முடியுமா?
இப்பேராதிக்கவாதிகள் உண்மையிலேயே ஒரு சிறுபான்மையினர். ஆனால் அவர்கள் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த அதிகாரபலமுள்ள ஒரு சிறுபான்மையினர். அவர்களின் வலைக்குள்ளேயே ஜனாதிபதி கோத்தாபய இன்று சிக்கியுள்ளார். எவ்வாறு அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயகா, சிங்களப் பேரினவாதிகளின் வலைக்குள் சிக்கினாரோ அதேபோன்று இன்றைய ஜனாதிபதி பௌத்த பேராதிக்கவாதிகளின் வலைக்குள் சிக்கியுள்ளார்.
அந்த பிரதமரோ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர், ஆங்கில மொழியில் அழகுற விவாதித்துக் கேட்போரைக் கவரும் வல்லமையுள்ளவர். சமவுடமைக் கருத்துக்களில் ஈர்ப்புடையவர். இருந்தும் அரசியல் அதிகார வேட்கை அவரை இனவாதிகளின் பிடிக்குள் தள்ளிவிட்டது. இன்றைய ஜனாதிபதியும் அமெரிக்காவில் வாழ்ந்தவர். அந்நாட்டின் ஜனநாயகத்தை நேரிலே கண்டு, அதன் நலன்களையும் அனுபவித்து, அங்கு எவ்வாறு சகல இனங்களும் சௌஜன்யமாகக் கலந்துறவாடுகின்றன என்பதையும் அறிந்தவர். இராணுவத் தேர்ச்சிபெற்று அதன் ஒழுங்கு முறைகளை வாழ்விலும் கடைப்பிடிப்பவர். படாடோபங்களைக் களைந்தெறிந்து எளிமையான வாழ்வில் நாட்டமுள்ளவர். தேசமும் தேசமக்களும் செழிக்க வேண்டுமென்ற அவாவுடையவர். ஒரு சிறந்த பௌத்தர். அவரோ அவரின் சகோதரர் மகிந்தவோ அல்லது அவரின் ஏனைய சகோதரர்களோ தனிப்பட்டமுறையில் இனவாதிகளல்லர். இருந்தும் அரசியல் அதிகார வேட்கை அவரையும் உறவினர்களையும் பௌத்த பேராதிக்கவாதிகளின் வலைக்குள் சிக்கவைத்துள்ளது. அன்றைய பிரதமருக்கு நடந்தகதி இன்றைய ஜனாதிபதிக்கு நடக்கக்கூடாதென அனைவரும் விரும்பிப்பிரார்த்திப்பதுடன், அவரை அவ்வலைக்குள்ளிருந்து விடுவிக்கவும் யாவரும் பாடுபடல் வேண்டும். எவ்வாறு?
பேராதிக்கவாதிகளின் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேற வேண்டுமானால் அவர்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது சகல அதிகாரங்களும் கொண்ட ஒரு ஜனாதிபதி ஆட்சிமுறை. ஓர் அரசாங்கத்தின் பல மந்திரிகளை ஆட்டுவிப்பதைவிட தனியொரு ஜனாதிபதியை ஆட்டுவிப்பது இலேசல்லவா? ஆனால், அந்த அதிகாரங்களை அரசியல் யாப்பின் 19ஆம் திருத்தம் குறைத்து பிரதமரின் அதிகாரங்களைக் கூட்டியுள்ளது. ஒரு கட்சியின் அடிப்படையில் பிரதமர் தெரிவு செய்யப்படுவதால் அக்கட்சியின் தில்லுமுல்லுகளைத் தாண்டி ஒரு பிரதமரால் கருமமாற்ற முடியாதென அறிந்த பேராதிக்கவாதிகள் அந்தத் திருத்தத்தை நீக்கி மீண்டும் ஜனாதிபதியின் கைகளில் அதிகாரங்களைக் குவிக்கவேண்டுமென விரும்புகின்றனர். அவ்வாறான யாப்புமாற்றம் செய்யும் மசோதாவுக்கு மூன்றிலிரண்டு வாக்குகள் நாடாளுமன்றத்தில் கிடைக்கவேண்டும். நடைமுறையிலிருக்கும் இன்றைய நாடாளுமன்றத்தில் அந்த வாக்குப் பலமில்லை. இதனாலேதான் எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவின் பொதுஜன முன்னணி மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆசனங்களைக் கவரவேண்டுமென்று பேராதிக்கவாதிகள் விரும்புகின்றனர். அந்த விருப்பினை ஜனாதிபதியும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர்களின் விருப்பப்படி தேர்தல் முடிவுகள் இடம்பெறுமானால் கோத்தாபய ராஜபக் ஷ சர்வ அதிகாரங்களும் நிறைந்த ஜனாதிபதியாக மாறுவதுடன் பேராதிக்கவாதிகளின் கைப்பொம்மையாகவும் மாறுவார். அதற்கு அவர் தயாரா? அவர் தாயாரென்றாலும் இப்போதுள்ள அதிகாரங்களை இழந்து அவற்றை தன் இளைய சகோதரருக்குத் தாரைவார்த்துக்கொடுக்க மஹிந்த விரும்புவாரா? ஏற்கனவே நடைமுறைப்படுத்தபட்ட கோத்தாபயவின் பல செலவுச்சிக்கன நடவடிக்கைகள் பிரதமரதும் அமைச்சர்களினதும் படாடோப வைபவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடு விதித்தள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் வலுவடைந்தால் இன்னும் என்னென்ன கட்டுப்பாடுகள் இடம்பெறுமோ? இவைகளால் சகோதரர் உறவும், குடும்ப உறவும் தளர்வடையுமா?
எல்லாவற்றிற்கும் மேலாக எவ்வளவு தூரம் ஜனாதிபதியினால் பேராதிக்கவாதிகளின் தாளத்துக்கு ஆடமுடியும்? பேராதிக்கத்துக்கெதிராக உள்நாட்டில் எழும்பும் எதிர்ப்புகளை பாதுகாப்புத்துறையினால் அடக்க முடியுமெனினும் சர்வதேச எதிர்ப்புகளையும் நெருக்குதல்களையும் எவ்வாறு சமாளிப்பது? அவற்றின் பொருளாதாரத் தாக்கங்களை எவ்வாறு எதிர்கொள்வது? ஆகவே பேராதிக்கவாதிகளின் கோரிக்கைள் எல்லை மீறும்போது அவரால் தொடர்ந்தும் தலையசைக்க முடியுமா? அவ்வாறு மறுக்கும்போது ஜனாதிபதியின் கதி? பண்டாரநாயகாவின் அரசியல் வாழ்வு கற்பித்த பாடங்களை அவர் மறந்திருக்கமாட்டார். எனவே ஜனாதிபதியை பேராதிக்கவாதிகளின் வலைக்குள்ளிருந்து விடுவிக்கவேண்டும். அதற்கு ஒரே வழி எதிர்வரும் தேர்தலில் பொதுஜன முன்னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றி கிடைக்காமல் செய்வதே.
இன்று எதிர்க்கட்சிக்குள் நடை பெறும் சண்டைகளும் போட்டியும், சிறுபான்மை இனங்களுக்குள் நடைபெறும் தலைமைத்துவப் போட்டிகளும் கூட்டணித் தந்திரங்களும் மஹிந்தவின் கட்சி வெற்றிபெறுவதற்கு வழிவகுத் துள்ளன. ஆனால் அந்த வெற்றியின் அளவைச் சிறுபான்மையினரால் கட்டுப்படுத்தலாம்.
இந்த அடிப்படையிலேயே முஸ்லிம் வாக்காளர்கள் செயற்படவேண்டும். இதனையே தமிழினமும் உணரவேண்டும். உணர்வார்களா?-Vidivelli
கலாநிதி அமீர் அலி,
Post a Comment