Header Ads



ஜனாதிபதி கோத்தாபயவிற்கு ஆதரவு, வழங்கியமையிட்டு பெறுமையடைகின்றோம்

ஜனாதிபதித் தேர்தலின் போது கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் பெருமையடைவதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார, அரசாங்கத்தின் சிறந்த விடயங்களுக்கு ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சி கூறுவதில் எமக்கு நம்பிக்கை இல்லை.பொதுத் தேர்தலின் ஊடாகவே இதற்கு தீர்வினைக் காண முடியும் என கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று -24- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக எதிர்க்கட்சி கூறுவதில் எமக்கு சிறிதேனும் நம்பிக்கை இல்லை.

வரவு - செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டாலும் அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கான பெரும்பான்மை எமக்கு இல்லை. எனவே வெகுவிரைவில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க எடுத்த தீர்மானத்தை எண்ணி பெருமையடைகின்றோம்.

அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அரசியல் ஸ்திரமடைந்துள்ளது. எனினும் பாராளுமன்றத்தில் எமக்கு 95 ஆசனங்கள் மாத்திரமே உள்ளன. இதனால் பாராளுமன்றத்தில் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படாமலுள்ளது. 

மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக எதிர்க்கட்சி கூறுகின்றது. எனினும் எமக்கு அதில் நம்பிக்கை இல்லை. எம்மால் வரவு - செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டாலும் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஜே.வி.பி மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆதரவாக வாக்களிக்காது. 

எனவே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்று ஸ்திரமான ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றியை மக்கள் எமக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொதுமக்களின் நிதி வீணடிக்கப்படுவதை முற்றாக ஒழித்திருக்கிறார். அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்கள் என்பவற்றில் ஜனாதிபதி, பிரதமர் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்போரது படங்களை காட்சிப்படுத்துவது எமது நாட்டின் அரசியல் கலாசாரம் போன்றிருந்தது. எனினும் அந்த நடைமுறைகளையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாற்றியமைத்துள்ளார். 

வறுமையிலிருக்கும் மக்களுக்கான சமூர்த்தி கொடுப்பனவை அதிகரிப்பதை விடவும் அவ்வாறான குடும்பங்களிலுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் வறுமையிலிருக்கும் மக்களுக்கான நிவாரணத்தை வழங்க முடியும். மேலும் உள்நாட்டு உற்பத்திகளையும் மேம்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுகின்றோம். 

நாட்டில் இடம்பெறும் விபத்துக்களில் இறப்பவர்கள் பற்றி மாத்திரமே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. விபத்துக்களில் அங்கவீனமடைதல் அல்லது பாதிக்கப்பட்டோர் தொடர்பில் எந்த தகவல்களும் வெளிப்படுத்தப்படுவதில்லை. எனவே ஜனாதிபதி இது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

(எம்.மனோசித்ரா)

No comments

Powered by Blogger.