சுவிட்சர்லாந்தில் சீனர்களுக்கு உணவளிக்க மறுத்த உணவகங்கள்
சுவிட்சர்லாந்தில் உள்ள சில சீன உணவகங்கள் இனி சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணக் குழுக்களுக்கு உணவளிப்பதில்லை என அறிவித்துள்ளனர்.
சீனாவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பொதுவாக இங்குள்ள சீனத்து உணவகங்களை விரும்புவது வழக்கம்.
ஆனால் தற்போது சீனாவில் கொரோனா வியாதி காரணமாக நிலை தலைக்கீழாக மாறியுள்ளதால், சீனத்து சுற்றுலாப் பயணிகளுக்கு சுவிஸ் உணவகங்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரவும் கொரோனா வைரஸைப் பற்றி பயமாக உள்ளது. எனவே எனது உணவகத்தில் சீனாவிலிருந்து பயணக் குழுக்களை இனி அனுமதிக்க மாட்டேன் என சூரிச் பகுதி சீன உணவக உரிமையாளர் ஒருவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
சீனாவில் என்ன நடக்கிறது என்பது வருத்தமளிக்கிறது, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக விருந்தினர்களை மறுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறுகிறார்.
மேலும், சுவிஸ் விமான நிலைய அதிகாரிகள் கண்டிப்பாக தீவிர நவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அவர்,
உண்மையில் சுவிஸ் அதிகாரிகள் கொரோனா வியாதி தொடர்பில் கவனம் செலுத்துகிறார்களா என்பது சந்தேகமாக உள்ளது என்றார்.
சூரிச் பகுதியில் மட்டுமின்றி லூசெர்ன் நகரிலும் இதே நிலை தான். தங்களது உணவகத்தில் சீனத்து பயணிகள் முன் பதிவு செய்திருந்தால் கண்டிப்பாக அதை ரத்து செய்ய இருப்பதாக ஒரு உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் முதல் கொரோனா பாதிப்பு பதிவான உடன், எனது ஊழியர்கள் மருத்துவ முகக்கவசம் அணிந்து மட்டுமே வெளியே செல்கிறார்கள் என அந்த உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ், ஆஸ்திரியாவை அடுத்து சுவிஸில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவருக்கு சூரிச்சின் ட்ரைம்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, சீனாவில் ஏற்கனவே 81 பேர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டனர், மேலும் 2,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment