இலங்கையிலும் கொரோனா வைரஸா...? சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேககிக்கப்படும் சீன பெண்ணொருவர் உட்பட இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சீனாவில் வசிக்கும் மூன்று இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும், எனினும் அவர்கள் மூவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸால் இலங்கை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுகாதார அமைச்சு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
சீனாவிலுள்ள இலங்கையர்களை பாதுகாக்கும் வகையில் அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகமும் விசேட ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
சீனாவில் சுமார் 1287 அதிகமானோர் இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் புத்தாண்டு கால விடுமுறையென்பதால் சுற்றுலாப்பயணிகளின் இலங்கை வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே சீனாவின் முக்கிய பகுதிகளில் பரவி வரும் கொரொனா வைரசின் தாக்கம் அவுஸ்திரேலியா , அமெரிக்கா , தாய்லாந்து , ஜப்பான் , தென்கொரியா ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் உள்ள இலங்கையர்களுக்கு எந்த வித பாதிப்புக்களும் இல்லை என சீனாவின் பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தின் உஹூன் பகுதியில் வசிக்கின்ற இலங்கையர்களின் உறவினர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டுவதற்கான ஏற்பாடுகளையும் தூதரகம் மேற்கொண்டுள்ளது. அதற்காக வட்ஸ்அப் குழு ஒன்றையும் ஆரம்பித்துள்ளது.
இந்த வைரஸ் தாக்கம் தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுரைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளது. வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வரும் உஹூன் பகுதியில் இருக்கும் இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளையும் இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள அலெக்ஸி குணசேகர 108613070138025 , கல்பா சஞ்சீவா - 108613051733302 , இன்னோகா வீரசிங்க 108615116905523 , திலினி குணரத்ன 108613121722296 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொண்டு உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பீஜிங் , சென்டு மற்றும் சிவான்கோ ஆகிய விமான நிலையங்களிலிருந்து பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு தினமும் 4 விமானங்கள் வந்தடைவதாகவும் அந்த விமானங்களின் ஊடாக நாளொன்றிற்கு சுமார் 500 இற்கும் அதிகமான பயணிகள் நாட்டிற்கு வருகை தருகின்றனர்.
இலங்கை விமான சேவையின் ஊடாகவும் சீனாவின் குறிப்பிட்ட சில விமான நிலையங்களுக்கு பயணிகள் செல்கின்றனர். ஆகவே , அந்த பயணிகளும் இந்த தொற்றுதொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் நிலைமை நியூமானியா வைரசின் தாக்கத்தை போன்றதெனவும் , ஒருவருக்கு ஒருவர் தொற்றக்கூடியதெனவும் சீன சுகாதாரப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவின் பயணத்திற்கு பின்னரோ முன்னரோ மூச்செடுத்தல் தொடர்பில் சிக்கல் அறி குறி தோன்றினால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.
Post a Comment