கோட்டாபய - மஹிந்த இடையில் அதிகார போட்டியோ, முரண்பாடுகளோ இல்லை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் எவ்வித அதிகார போட்டி தொடர்பான முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை என துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தொடர்ந்து இணக்கமாக செயற்பட முடியாது என்று எதிர்த்தரப்பினர் தற்போது தவறான அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.
பிரதமராக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியுடன் இணைந்து பலமான அரசாங்கத்தை கொண்டு செல்வதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் குறிப்பிடுவது நகைப்புக்குரியது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெறும் கனவாகவே அமையும்.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை புறக்கணித்த மக்கள் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியையும் முழுமையாக புறக்கணிப்பார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் எவ்வித அதிகார போட்டி தொடர்பான முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை.
இருவரும் ஒன்றிணைந்தே சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக் ஷ பொருத்தமானவர் என்பதை பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அதிகார முரண்பாட்டை தோற்றுவித்துள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு அவசியமாகும்.
அரசியல் ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நிலையான நாடாளுமன்றத்தை தோற்றுவிக்க வேண்டுமாயின் மக்கள் பெரும்பான்மையான ஆதரவினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கவேண்டும்” என்றார்.
Post a Comment