வடக்கு, கிழக்கில் கூடுதலான வேட்பாளர்களை களமிறக்க எதிர்பார்த்துள்ளோம்
ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் கூடுதலான வேட்பாளர்களை களமிறக்க எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று 22 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது வேட்பாளர் பட்டியல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். எங்களுக்கு ஒரு ஒதுக்கீடு கிடைக்கும். இது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கில் நாம் கட்சியை பலப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். அதற்கமைய அந்த பிரதேசத்தில் கூடுதலான வேட்பாளர்களை களமிறக்க எதிர்பார்த்துள்ளோம்.
ஏனைய பிரதேசங்களில் எமக்கு கிடைக்கும் ஒதுக்கீடுகளுக்கு அமைய பேச்சுவார்த்தையை நடத்தி தீர்மானிக்கவுள்ளோம். பசில் ராஜபக்ச நாட்டை வந்தடைந்ததும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் பதிவு செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். ஆகவே கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலேயே அவதானம் செலுத்தியுள்ளோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படுவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளதாக தெரிவித்துள்ள தயாசிறி ஜயசேகர, எனினும் சுதந்திரக் கட்சி அழிவடைந்து விட்டதாக தெரிவிக்க எவருக்கும் உரிமையில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment