கைது நடவடிக்கைகளின் போது அனைவரையும், சமமாக நடாத்துமாறு ஜனாதிபதி பணிப்பு
கைது செய்யப்படும் அனைவரையும் சமமாக நடாத்துமாறும் எந்தவித அழுத்தங்களுக்கும் கீழ்படியாது செயற்படுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதிற்கடமை பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது வெளி நோக்கங்களுக்காகவும் எவரும் கைது செய்யப்படக்கூடாதெனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
எவரேனும் ஒரு நபரை கைது செய்யும் நடவடிக்கை இடம்பெற வேண்டியது குறித்த பொறுப்பை நிறைவேற்றும் அதிகாரியின் தொழில்சார் தீர்ப்பின் அடிப்படையிலாகும் என்றும் அக்கடமை சுயாதீனமாகவும் எவ்வித பயமுறுத்தல் அல்லது அனுசரணைகளுமின்றி இடம்பெறுவதை உறுதிசெய்து கொள்ளுமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
“கைது நடவடிக்கைகள் தண்டனையின் ஒரு பகுதியல்ல என்பதுடன், அது கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கும் சமூக அந்தஸ்திற்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடாகும். இதனால் பொலிஸார் மிகுந்த கவனத்தோடும் சட்டதிட்டங்களை முழுமையாக பேணியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வைத்தியர்கள் போன்ற தொழில்வல்லுனர்களை கைது செய்யும்போது பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்படும் நபருக்கு உரிய மரியாதையினை வழங்குதல் வேண்டும். தூரநோக்குடன் உரிய முறையில் கடமையை நிறைவேற்றுமாறும் தேவையான போது சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் செயற்படுமாறும் ஜனாதிபதியின் செயலாளரினால் பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர் (ஊடகம்)
2020.01.23
Post a Comment