Header Ads



இலங்கைக்கு உதவ, கட்டார் முன்வருகை - ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து உறுதிமொழி

சக்தி வலு உற்பத்திக்கு நம்பகமானதொரு வலையமைப்பை நிறுவுவதற்கு இலங்கைக்கு உதவ கட்டார் அரசு முன்வந்துள்ளது. இது சக்தி வலுத் துறையில் உயர்மட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பை இந்த நோக்கத்திற்காக கொண்டு வரும்.

கட்டார் நாட்டின் சக்தி வலு விவகாரத்துறை அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி (Saad Sherida
Al Kaabi) இன்று (26) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தபோது இந்த உறுதிமொழியை அளித்தார்.

அண்மையில் நடந்த தேர்தல் வெற்றிக்காக ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த கட்டார் அமைச்சர், தனது நாட்டின் முன்மொழிவை அமுல்படுத்துவது தொடர்பான விடயங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்கான இலங்கை பிரதிநிதியை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், சக்தி வலு உற்பத்தியில் கட்டாரின் ஒத்துழைப்பைப் பெறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க சக்தி வலு மூலங்களில் இருந்து நாட்டின் 80% சக்தி வலு தேவைகளை பூர்த்தி செய்வதே தனது திட்டமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி அவர்கள் தனது செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர அவர்களை தனது பிரதிநிதியாக நியமித்தார். மேலதிக கலந்துரையாடல்களுக்காக ஜனாதிபதியின் செயலாளர் டோஹாவுக்கு அழைக்கப்படவுள்ளார். இலங்கையின் சக்தி வலு திட்டம் குறித்து இவ்விஜயத்தின்போது விளக்கப்படும். 

பாகிஸ்தான், போலந்து உள்ளிட்ட பல நாடுகளில் இதுபோன்ற முயற்சிகளை தனது நாடு வெற்றிகரமாக நிறுவியுள்ளது என்று கட்டார் அமைச்சர் குறிப்பிட்டார்.

"சக்தி வலு உற்பத்திக்கு அப்பால் கட்டார் அரசுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த நாம் விரும்புகிறோம். எமது நாட்டின் தேயிலை, மரக்கறி மற்றும் பழங்களுக்கான சந்தைவாய்ப்பையும் எதிர்பார்க்கின்றோம். இதுபோன்ற உற்பத்திப்பொருட்களை ஏனைய நாடுகளுக்கும் வழங்குவதற்கான விரிவான ஆற்றல் எங்களிடம் உள்ளது” என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இதற்கு சாதகமாக பதிலளித்த கட்டார் அமைச்சர்,  இலங்கைக்கான தனது இந்த விஜயம் இத்தகைய மேம்பட்ட ஒத்துழைப்பின் முதற் படியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இலங்கைக்கான கட்டார் நாட்டின் தூதுவர் ஜாசிம்பின் ஜாபிர் அல்-சரூர், (Jassimbin Jaber Al-Sorour) வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர் (ஊடகம்)
2020.01.26

No comments

Powered by Blogger.