Header Ads



கடும் பாதுகாப்புடன் சீனப் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை - இரத்தம் வெளிநாடு போகிறது

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் இலங்கையில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து வருகை தந்த ஒருவருடைய இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையிலேயே இந்த வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிலிருந்து வருகை தந்த அந்த பெண்ணிற்கு கடந்த 25ஆம் தேதி ஏற்பட்ட காய்ச்சலை அடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே விசா தரும் முறை உடனடியாக ரத்து செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க சீன பெண்ணொருவருக்கே இந்த வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிடுகிறார்.

குறித்த பெண்ணின் இரத்த மாதிரியை மேலதிக பரிசோதனைகளுக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் இரத்த மாதிரியின் பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெறும் வரை, அவருக்கு கொரோனா வைரஸ் சிகிச்சைகள் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பெண்ணிற்கு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.