UNP க்குள் பெரும் வெடிப்பு,, ரணிலுடன் அவசர சந்திப்புக்கு சஜித் அழைப்பு
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உருவாகியுள்ள உட்கட்சிப் பூசல் மிகமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், சஜித்பிரேமதாச தரப்பினர் பொதுத்தேர்தலுக்கு முன்னர் தலைமைப்பதவியிலிருந்து விலகுமாறு கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடும் அழுத்தத்தை பிரயோகித்துள்ளனர்.
உடனடியாகக் கட்சி செயற்குழு கூட்டத்தைக் கூட்டத்தவறினால், மாற்று நடவடிக்கைகளில் இறங்கப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்ந நிலையில், இரண்டு தினங்களுக்கிடையில் நேரடியாக சந்தித்துப் பேச வருமாறு சஜித் பிரேமதாச ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பிருந்தே கட்சிக்குள் நெருக்கடி நிலை அதிகரித்து வந்தது. ரணில் தரப்பு கட்சிக்குள்ளிருந்தும் சஜித் தரப்பு வெளியே இருந்தும் செயற்பட்டுவந்த நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்த பங்காளிக்கட்சிகளின் சமரச முயற்சிகளால் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
எனினும், தேர்தலில் சஜித் தோல்வியடைந்ததன் காரணமாக கட்சிக்குள் காணப்பட்ட உட்பூசல் மீண்டும் விஸ்வரூபமெடுத்தது. எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் சஜித்துக்கு விட்டுத்தர வேண்டுமென்று ரணில் விக்கிரமசிங்க மீது தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன.
கட்சி பிளவு படுவதை தடுக்கும் வகையில் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலரும், பங்காளிக்கட்சிகளும் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்க ரணில் உடன்பட்டு உத்தியோக பூர்வமாகவும் அறிவித்தார்.
ஆனால், கட்சித்தலைமைப் பதவி குறித்து கட்சி செயற்குழுவே தீர்மானிக்க முடியுமெனவும் அந்த முடிவுக்கமைய கட்சியின் விஷேட மாநாட்டை கூட்டி அறிவிக்கப்படுமென கட்சி செயலாளர் அகில விராஜ் காரியவசம் அறிவித்திருந்த நிலையில், கட்சி செயற்குழுவுக்கு சிபாரிசுகளை வழங்க ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. லக்ஷ்மன் கிரியெல்ல, ஆஷூமாரசிங்க வஜிர அபேவர்தன, ரஞ்சித் மத்துகம பண்டார, தலதா அத்துகோரள ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவுக்கு வெளியே இருத்து ரஞ்சித் மத்துகம பண்டாரவும், தலதா அத்துகோரளவும் கருத்து வெளியிட்டதன் காரணமாக அந்தக்குழுவும் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. மத்தும பண்டார, தலதா அத்துகோரள இருவரும் குழுவில் தொடர்ந்து இணைந்து செயற்படப்போவதில்லையென அறிவித்துள்ளனர்.
இந்தக் குழு அமைப்பது அர்த்தமற்றதெனவும் உடனடியாக செயற்குழுவைக் கூட்டி கட்சித்தலைமைப்பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுத்துவிட்டு ரணில் விக்கிரமசிங்க ஒதுங்க வேண்டுமெனவும் சஜித் தரப்பைச் சேர்ந்த 21எம்.பிக்கள் ரணிலிடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.
இந்த நிலையில், சஜித் பிரேமதாச நேற்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியாக பேசவிரும்புவதாகவும் கட்சி பிளவுபடுவதைத் தவிர்ப்பதற்கு காத்திரமான முடிவுகாணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதோடு இரண்டு தினங்களுக்கிடையில் இச்சந்திப்பு இடம்பெற வேண்டியதன் அவசரத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவும் அவரது தரப்பினரும் தொடர்ந்து பிடிவாதப்போக்கில் செயற்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக சஜித்தரப்பினர் அடுத்து வரக்கூடிய சில தினங்களுக்கிடையில் மாற்றமான முடிவொன்றை எடுக்கும் வகையில் திட்டம் தீட்டிவரும் நிலையிலேயே சஜித் பிரேமதாச இந்த அவரச வேண்டு கோளை ரணிலுக்கு விடுத்திருக்கின்றார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்க நேற்று காலியில் நடந்த கூட்ட மொன்றில் பேசுகையில், கட்சியைச் சிதறடிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்போவதில்லை எனவும். கட்சியைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பை தாம் ஏற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
கட்சி யாப்பு விதிகளின்படியே நிருவாக மறுசீரமைப்பு இடம்பெறுமனவும், பதவிகளை தட்டிப் பறிக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க கடும் தொனியில் தெரிவித்திருக்கின்றார். இஃது இவ்விதமிருக்க ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளியாக இருக்கும் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கின்றபோது, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தில் ரணில் தொடர்ந்து இருக்கவேண்டுமெனவும் கட்சியை சீராக வழிநடத்த அவரே பொருத்தமானவர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் தவறுகளைத் திருத்தி எதிர்காலத்தில் புதிய பாதையில் பயணிப்பதற்காக எதிர்வரும் ஜனவரி முதல் மகா சங்கத்தினரைச் சந்திக்கவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க.வுக்குள் உருவாகியுள்ள இந்த உட்பூசலால் கட்சி பலவீனமடைந்து வருவதாகவும் கட்சிக்குள் பாரிய வெடிப்பு எந்த நேரத்திலும் ஏற்படலாமெனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்திருக்கினர். இந்த உட்கட்சி பூசல் தொடருமானால் எதிர்வரக் கூடிய பொதுத்தேர்தல் கட்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகின்றது.
எம்.ஏ.எம். நிலாம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
Post a Comment