Dr சாபியிடம் மீண்டும், விசாரணைகள் ஆரம்பம்
கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மீளவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குருணாகல் நீதவான் வழங்கிய உத்தரவிற்கு அமைய இந்த விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான குழு இந்த விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சந்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட தாய்மார்கள் மற்றும் வைத்தியசாலையின் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதே இந்த குழுவிற்கான முக்கிய பணியாகும்.
முறையற்ற வகையில் சொத்து சேகரித்ததாகவும் தாய்மார்களை கருத்தடை சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட டொக்டர் சாஃபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் (16) ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குருணாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கட்டில் இலக்கத்தை மாற்றி சிசுவொன்றை விற்பனை செய்தமை தொடர்பில் அடுத்தகட்ட வழக்கு விசாரணையின் போது அறிக்கை சமர்ப்பிப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.
நீதியான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, குறைபாடாகக் காணப்படும் சாட்சிகள் குறித்து மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி மன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
தமது சேவை பெறுநர் மாதந்தோறும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராவதாகவும் இதன் காரணமாக மட்டக்களப்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அலுவலகத்திற்கு செல்வதற்கான அனுமதியை வழங்குமாறும் பிரதிவாதியான வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி சார்பில் மன்றில் ஆஜராகிய நீதிபதிகள் குழாம் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், இந்த கோரிக்கையை ஆட்சேபித்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சந்தேகநபரான வைத்தியர் இரண்டு தடவைகள் பிணை நிபந்தனையை மீறியுள்ளதாக மன்றுக்கு அறிவித்துள்ளனர்.
Post a Comment