Header Ads



சுவிஸ் தூதரக விவகாரம்: கோட்டாவுக்கு சேறுபூசும் முயற்சியாக இருக்கலாம்

- கவிதா சுப்ரமணியம் -

இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்ற சம்பவம், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சேறுபூசும் முயற்சியாக இருக்கலாம் என, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். 

இது தொடர்பாக, வெளிவிவகார அமைச்சில், நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஊழியர் கடத்தல் விவகாரம் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகள் குறித்து, இலங்கையின் சுவிட்ஸர்லாந்து தூதரகம் உள்ளிட்ட அனைத்துத் தூதரக தூதுவர்களுக்கும்  விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கடத்தல் என்று கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்புடைய விசாரணைகளை நோக்கும்போது, புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியைத் தவறாக சித்திரிக்கும் ஒரு செயலாகக் கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.

“பெண் கடத்தப்பட்டார் என்று, சுவிஸ் தூதரகத்தால் வழங்கப்பட்ட சில தரவுகளில் உண்மை நிலை இல்லை” என்றார்.

எவ்வாறாயினும், இந்நிகழ்வு நடைபெற்ற தினத்தன்று எடுக்கப்பட்ட தரவுகளும் வழங்கப்பட்ட தரவுகளும் ஒன்றுக்கு ஒன்று முரணாகக் காணப்படுவதாகவும் அது ஒன்றுடனொன்று பொருந்தவில்லை என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், இதுவரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என்றும் இது தொடர்பில் எந்தவொரு வாக்குமூலமும் வழங்கவில்லை என்றும் கூறிய அவர், எங்களுக்கு சுவிஸ் தூதரகத்தால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தற்போது சுகவீனமுற்று இருக்கும் பாதிக்கப்பட்ட பெண், வெளியில் வந்து, வாக்குமூலம் வழங்குவார் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த பெண்ணும் அவருடைய குடும்பத்தாரும், பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதை, சுவிட்ஸர்லாந்து தூதரகம் தங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய குடும்பத்தாரும், வாக்குமூலம் வழங்குவதற்கு  வெளியே வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

1 comment:

  1. திரைப்படங்களில் சாக்கி சொல்லாமல் தடுக்கின்ற முறையெல்லாம் இருப்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாத விடயமா?

    ReplyDelete

Powered by Blogger.