முஸ்லிம்களின் வாக்குகளை புதிய அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு அமைப்பாளர்களுக்கு உள்ளது - மைத்திரி
எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கும் அரசாங்கத்தில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் பொறுப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்தது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அந்த பொறுப்பை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்ற வேண்டியது கட்டாயம் என அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அமைப்பாளர்களுடனான சந்திப்பு நேற்று (12) இடம்பெற்றது.
இதில் பங்கேற்ற போதே அவர் இதனை கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் எதிர்காலத்தில் பலமிக்க ஒரு அரசாங்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என கூறினார்.
அத்துடன் அரசாங்கம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழப்பும் பொறுப்பு தொகுதி அமைப்பாளர்களுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் எதிர்வரும் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை புதிய அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்கும் பொறுப்பும் தொகுதி அமைப்பாளர்களுக்கு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment