கட்சித் தலைவராக, நானே இருப்பேன் - ரணில் விடாப்பிடி
“நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகோபித்த தீர்மானத்துக்கமைய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படவுள்ளார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நானே தொடர்ந்து இருப்பேன்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருமுனைப் போட்டி நிலவியதால் கடந்த இரு வாரங்களாக சர்ச்சை நீடித்தது.
இந்தநிலையில் இது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவை எடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றுமுன்தினம் சிறிகொத்தவில் நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாஸவின் பெயரை முன்மொழிவதற்கு ஏககமானதாகத் தீர்மானிக்கப்பட்டது.
கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்தால் இந்தத் தீர்மானம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நேற்றுமுன்தினமே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. உடனே சபாநாயகரும் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார்.
எதிர்வரும் 3ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அக்கிராசன உரை முடிந்த பின்னர் சபை மீண்டும் பிற்பகல் ஒரு மணிக்குக் கூடும்போது இந்த நியமனம் குறித்து சபைக்கு அறிவிப்பேன் என்று சபாநாயகர் அறிக்கையூடாகத் தெரிவித்தும் உள்ளார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு ரணில் விக்ரமசிங்க விட்டுக்கொடுத்ததால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலும் மாற்றம் வரக்கூடும் என செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், "ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நானே தொடர்ந்து இருப்பேன்" என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எமது கட்சி ஜனநயாகக் கட்சி. இதற்குள் முரண்பாடுகள் ஏற்பட நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கட்சியின் தலைவர் என்ற வகையில் இலகு வழியில் தீர்வைக் காண்பேன். அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எழுந்த சர்ச்சைக்குத் தீர்வு கண்டேன்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கமைய நானே தொடர்ந்து கட்சியின் தலைவராக இருப்பேன்" - என்று அவர் மேலும் கூறினார்.
Post a Comment