Header Ads



அரச துறையில் உள்ள அனைத்து பலவீனங்களையும், உடனடியாக சரிசெய்ய வேண்டும் - ஜனாதிபதி கோத்தாபய

முன்னேற்றமானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அரச துறையில் உள்ள அனைத்து பலவீனங்களையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதுடன், மனப்பாங்கு மாற்றமொன்றின் ஊடாக வினைத்திறனானதும் முறையானதுமான அரச சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புதிய இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களிடம் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சுக்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட புதிய செயலாளர்கள் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

அரச சேவையை முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுப்பதில் நவீன தொழிநுட்பத்தை கூடியளவு பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச கட்டமைப்பை ஊழல் மோசடிகளற்ற சரியான பொறிமுறையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

அரச ஊழியர்களுக்கு பயிற்சி சந்தர்ப்பங்களை விரிவுபடுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அண்மையில தான் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இது தொடர்பில் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டார். 

தனது கொள்கை பிரகடனத்தின் மூலம் நாட்டின் அனைத்து துறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அந்த பொறுப்பை நிறைவேற்றுவதில் அனைத்து அமைச்சுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு பாரியதாகும் என்றும் அமைச்சு மட்டங்களில் உரிய முறையில் பொறுப்புக்களை நிறைவேற்றி தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்படுவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.