"சுவரோவியங்கள், நுண்கலை குறித்த விழிப்புணர்வு முஸ்லிம் சமூகத்துக்கு அவசியம்"
- Manazir Zarook -
பேராசிரியர் Msm Anes, அவரை சந்தித்த பல சந்தர்ப்பங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் கலைகள் விடயத்தில் கொண்டுள்ள நிலைப்பாடு பற்றி கவலைப்பட்டதுண்டு. குறிப்பாக, நுண்கலைகளில் எல்லைமீறிய 'ஹராம்' பத்வாக்கள் எவ்வளவு தூரம் இலங்கை முஸ்லிம் சமூகத்தை எதிர்மறையாக பாதித்துள்ளது என்றும், பிந்தள்ளியுள்ளது என்றும் விமர்சிப்பார். பல்கலைக்கழகங்களில் நுண்கலை கற்கும் முஸ்லிம் மாணவர்களுடனான (கிழக்குப் பல்கலைக்கழகம் என நினைக்கிறேன்) அவரின் உரையாடல்களும் அவ்வளவு மேம்பட்டதாக அமையவில்லை என்பது அவரது அனுபவம். அதாவது, நுண்கலை கற்கும் மாணவர்களிடமும் தேக்கமும், ஹராம் பத்வாக்களின் தாக்கமும் அவர் அவதானித்தவை. இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மரபு ரீதியாக பேணப்பட்டு வந்த கலைகள் மற்றும் நுண்கலைகள் இன்று அழிவடைந்துள்ளன அல்லது மரணத்தருவாயில் உள்ளன. இது குறித்து பேரா. அனஸின் "முஸ்லிம் நுண்கலை" மற்றும் "முஸ்லிம் நாட்டாரியல்" பற்றிய ஆய்வு நூற்கள் பேசுகின்றன.
.
விடயம் என்னவென்றால்... இன்று நாடு முழுவதும் சுவர் ஓவியங்கள் வரையும் செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அது சிங்கள சமூகத்தைப் பொருத்தவரையில் அவர்களின் கலாச்சாரத்தினை, வரலாற்று நிகழ்வுகளினை பிரதிபலிப்பதாக உள்ளது. (அதில் பலவற்றில் பெரும்பான்மை வாதத்தின் தாக்கம் அவர்கள் அறிந்தோ, அறியாமலோ பிரதிபலிக்கிறது என்பது உண்மை). முஸ்லிம் ஊர்கள் சிலதும் இச்செயற்திட்டத்தின் தாக்கத்தால், தமது ஊர்களின் சுவர்களை அலங்கரிக்கத் தொடங்கியுள்ளன. இவற்றில் சிங்கள மக்களுடன் கலந்து வாழும் ஊர்களும் இருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால், இலங்கை முஸ்லிம்கள் தமக்கென்று தனித்த நுண்கலை மரபொன்றை வளர்த்து வரவில்லை. குறிப்பாக, ஓவியக் கலையில் அதன் நிலைப்பாடு தலைகீழானது. எனவே, இலங்கை முஸ்லிம்களின் கலாச்சாரத்தினை ஒன்று கலந்து வாழும் ஏனைய சமூகங்களுக்கு முன்வைக்கும் எந்த சுவர் ஓவியத்தினையும் எங்களால் வரைய முடியாது. இயற்கை காட்சிகளையும், சில அழகுபடுத்தல்களையுமே எங்களால் வரைய முடியும். அல்லது பெரும்பான்மை வாதத்தினை திருப்திப்படுத்தும் கோஷங்களையே சுவர்களில் எழுத முடியும்.
.
ஒரு சமூகம் தன்னைப் பற்றிய அறிமுகத்தை, தனது பாரம்பரியத்தை கலைகள் மூலமே அடுத்த சமூகங்களுக்கு முன்வைக்கின்றன. சமூகங்களுக்கிடையிலான ஊடாட்டம் கலைகள் வழியே தான் இலகுவில் இடம்பெறுகின்றன. மலையாள முஸ்லிம் சமூகத்தின் கலாச்சாரத்தினை, அதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களினை வைக்கம் முகம்மது பஷீர் தனது நாவல்களில் காட்சிப்படுத்தி இருப்பார். நண்பர் சிராஜ் மஸ்ஹூரின் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட கவிதை வெளியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்திய பேரா. லியனகே அமரகீர்த்தி சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்மொழி இலக்கியங்கள் சிங்கள சமூகத்தில் தோற்றுவித்த உரையாடல்களை அழகுற விபரித்தார். பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் தமது கலாச்சாரத்தினை பிரநிதித்துவப்படுத்தும் எந்தவொரு நிகழ்வினையும் முன்வைக்க முடியாமல் எதிர்கொள்ளும் உளச்சிக்கல்கள் ஏராளம்.
.
நாவல், சிறுகதை, கவிதை, சினிமா, நாடகம், இசை, பாடல், ஓவியம், நாட்டாரியல் கலைகள் என்று பலதில் தரம்வாய்ந்த, சமூக மேம்பாட்டுக்குத் தேவையான அரிய படைப்புகளை பலர் வழங்கியுள்ளனர். இவற்றில் பலதை 'ஹராம்' என்ற பட்டியலுக்குள் நாம் ஏற்கனவே கொண்டு சென்று விட்டோம். ஆனால், யதார்த்தத்தில் முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் தொகையினர் இதனைத் தவிர்ந்து வாழ்பவர்கள் அல்லர். 'ஹராம்' என்ற மனப்பதிவினை பதித்துக் கொண்டே இதில் மூழ்கியும் உள்ளனர். எல்லைமீறிய ஹராம் என்ற இம்மனநிலை கலை, இலக்கியங்களில் புதிய படைப்புகளை, புத்தாக்கங்களை படைப்பதற்குப் பதிலாக அதன் நுகர்வாளர்களாக இவர்களை தொடர்ந்திருக்கச் செய்கின்றன. சினிமா, பாடல், இசை என்றாலே ஆபாசம் என்ற மனநிலை முஸ்லிம் சமூகத்தில் வேரூண்டச் செய்யப்பட்டது; அதுவொரு விதியைப் போன்றே அணுகவும் பட்டது.
.
அப்படியொரு விதி இல்லையென்றும், அவை தவறான பார்வைக் கோணத்தின் அடியாக எழுபவை என்பதையும் நாம் உணர வேண்டும். 'பரியேறும் பெருமாள்' மற்றும் 'அசுரன்' போன்ற அண்மைய திரைப்படங்களையேனும் பார்த்தால் கூட, சினிமாவின் புதிய சாத்தியங்களை புரிந்துகொள்ள முடியும். சாதியமைப்பின் கொடூரங்களையும், சமூக ஏற்றத்தாழ்வையும் சுமந்து திரியும் மனிதர்களை, சமூக அமைப்பை அம்பலப்படுத்தும் படைப்புகள். ஒடுக்கப்படும் மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் திரைப்படங்கள் அவை.
.
'ஹராம்' பற்றிய கரிசனம் அவசியமானவை தான். ஆனால், எமது எல்லைமீறிய ஹராம் பத்வாக்கள் கலை சார்ந்த எமது ஈடுபாட்டை முடக்குபவை, குற்றத்தன்மை வாய்ந்ததாக மாற்றுபவை. காய்ச்சலுக்குப் பயந்து தொடர்ந்தும் குளிக்காமல் இருப்பதைப் போன்றது இது. அல்குர்ஆன் தான் இறங்கிய சமூக அமைப்பின் இலக்கிய ரசனையை கவனத்தில் கொண்டது. அரபு இலக்கியங்களில் உயரிய இடத்தையும் அது பெற்றுக் கொண்டது. இது குறித்து தனியான நூற்களே இருக்கும் அளவு அதன் இலக்கிய தரம் உயர்ந்தது. வரலாற்று ரீதியிலும் (உலகலாவிய) முஸ்லிம் சமூகம் கலைகளின் வளர்ச்சிக்கும், புத்தாக்கத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளன.
.
இனியேனும் இவை குறித்த விழிப்புணர்வு முஸ்லிம் சமூகத்துக்குத் தேவை. இல்லையேல் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் பெரும்பான்மை வாதத்துக்கு கூஜா தூக்கும் கோஷங்களையே எழுப்ப வேண்டி ஏற்படும். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இந்த இடைவெளியினை பயன்படுத்தியே ஊடகத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அருகாமையில் கலந்து வாழும் ஏனைய சமூகத்தவர்களுக்கு எம்மை பற்றி அறிந்து கொள்ள இருக்கும் வாயில் மிகவும் குறுகியது. ஊடகங்கள் பரப்பும் வதந்திகளை இதனால் அவர்கள் இலகுவில் உள்வாங்கவும் செய்கின்றனர். எம்மை மூடூண்ட சமூகமாக தொடர்ந்திருக்கச் செய்வதிலும் இதன் தாக்கம் பாரியது.
.
#சுவர்_ஓவியங்கள்
#நுண்கலை
பேராசிரியர் அனஸ் ஸேர் அவர்களின் கருத்தில நான் முற்றும் முழுதும் உடன்படுகின்றேன். எமது முன்னையநாள் ஆசிரியர்கள் எமக்குக் கற்றுத் தரும்போது தமிழ் இலக்கியத்தின் நல்ல பண்புகளை நாமும் வரித்துக் கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. ஜாமிஆ நழீமிய்யாவின் முதலாவது அதிபர் மௌலவி யூ.எம் தாஸீன் அவர்கள் ஒருமுறை கவிஞர் அப்துல் கபூர் அவர்களை வரவேற்று உரையாற்றும் போது ' அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கவிஞர் அவர்களே, உங்கள் நாவில் வலம்வரும் சரஸ்வதியைக் காண ஆசைப்படுகின்றோம்' என வர்ணித்தார். இன்றைய மௌலவிமார்கள் அதற்கு நிச்சியம் சிர்க்கு பத்வாவையும் இலகுவில் வழங்கிவிடுவார்கள். அதனை மதிப்புக்குரிய அதிபர் அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியதல்லாது சரஸ்வதி கடவுளை அவர்கள் வர்ணிக்கவில்லை என்பதை நாம் கேட்டபோது விளங்கிக் கொண்டோம்.
ReplyDelete