Header Ads



சுவிஸ் தூதுரக பணியாளர் கைது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டவை இவைதான்..!

குற்ற விசாரணைத் திணைக்களத்தில் திரிபுபடுத்திய சாட்சியம் அளித்தார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட தூதரக பணியாளரான கார்னியர் பனிஸ்டர் பிரான்சிசை, எதிர்வரும் 30ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகப் பெண் பணியாளர் நேற்று மாலை சட்டமா அதிபரின் அறிவுறுத்தலை அடுத்து, குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் பின்னர் கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

இதன்போது அரச சட்டவாளர், “கடந்த இரண்டு நாட்களாக குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணையை நடத்தி சந்தேக நபரிடமிருந்து பல வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

விசாரணை ஆரம்பமாகி அது ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சென்ற பின், இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட முதல் முறைப்பாட்டுக்கு மாறாக ஏராளமான தகவல்கள் வெளிவந்தன,” என்று தெரிவித்தார்.

சுவிஸ் தூதரக இரண்டாவது அதிகாரி ராகுல் இம்பச் இந்தச் சம்பவம் தொடர்பாக செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்ற விசாரணைப் பிரிவு அவரிடம் முதலில் வாக்குமூலம் பதிவு செய்தது.

முதல் முறைப்பாட்டின் படி, அப்போது பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கானியர் பனிஸ்டரின் அடையாளம் சரியாக வெளியிடப்படவில்லை. தூதரக அதிகாரி அளித்த எழுத்து மூல முறைப்பாட்டில், பாதிக்கப்பட்டவரின் பெயரைக் குறிப்பிடாமல்” வி “என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

பெற்றோர்- ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சென். பிரிட்ஜெட் கொன்வென்ட் முன் கடத்தப்பட்டார், என்று அவர் கூறியிருந்தார்.

அவரது கடிதத்தில், பாதிக்கப்பட்டவர் பாடசாலையில் இருந்து வெளியே வந்தபோது, இனம்தெரியாத ஐந்து நபர்களால் கடத்தப்பட்டதாகவும், அவர் ஒரு வெள்ளை காரில் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டிருந்தது.

சம்பவத்தின் போது அவர் இரண்டு மணி நேரம் விசாரிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். சிஐடி விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா குறித்தும் அவரிடம் விசாரிக்கப்பட்டதுடன், அவருக்கு விசா வழங்கப்பட்டது குறித்தும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல் முறைப்பாட்டின் படி நடத்தப்பட்ட விசாரணைகளில், சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட நொவம்பர் 25 அன்று, அந்தப் பாடசாலையில்,  பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை எனத் தெரியவந்தது.

பாடசாலைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியுள்ள சி.சி.டி.வி காட்சிகள்  பெறப்பட்டு ஆராயப்பட்ட போதும் எந்த தகவலையும் பெற முடியவில்லை.

பின்னர், பாடசாலையில் இருந்த பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவரது அலைபேசி எண் பெறப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன. அவர் பயணம் செய்ததாகக் கூறப்படும் உபேர் வாடகை காரின் சாரதியை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவரது படத்தைக் காண்பித்த போது, சாரதி அடையாளம் கண்டுகொண்டார். நொவம்பர் 25ஆம் நாள் பிற்பகல் 3.30 மணியளவில், பல்மேரா அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்துக்கு அருகே அவரை இறக்கி விட்டதாக கூறினார்.

அதேவேளை பின்னர், கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ், சிஐடியினருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், சென். பிரிட்ஜெட் கொன்வென்ட்டில் கற்பிக்கும்  ஒரு ஆசிரியர் சுவிஸ் செல்வதற்கான நுழைவிசைவு ஆவணங்களைத் தயாரிப்பதற்கு உதவுவதற்காக, அவரது பல்மேரா அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சென்றதாக கூறியுள்ளார்.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே சம்பவம் நடந்ததாகவும், இனந்தெரியாத நபர்களால் தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, தாக்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.

நொவம்பர் 25ஆம் நாள், குறித்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு பிற்பகர் 3.30 மணிக்குச் சென்றிருந்த, பெண் அதிகாரி மாலை 5.01 மணிக்கு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

சம்பவம் நடந்த நேரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, மாலை 5.01 மணிக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்ததாகவும், அதை தனது கணவருக்கு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

எனினும், பல்மேரா அடுக்குமாடி வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் மாலை 5.01 மணிக்கு சந்தேக நபர் குடியிருப்பில் இருந்து வெளியே பெண் ஒருவருடன் சென்று கொண்டிருந்ததைக் காட்டுகின்றன.

ஆனால் நொவம்பர் 25 மாலை 5.01 மணிக்குப் பிறகு இந்த சம்பவம் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், குற்ற விசாரணைத் திணைக்களத்தின் விசாரணைகளை தவறாக வழிநடத்த, சந்தேக நபரானஅந்த பெண் வெவ்வேறு கதைகளைத் தயாரிக்க முயன்றார் என்பது தெரிவாகியுள்ளது.

மாளிகாவத்தையில் உள்ள சந்தேகநபர் கானியர் பனிஸ்டர் பிரான்சிசின் குடியிருப்புக்கு நொவம்பர் 27ஆம் நாள், சென்ற போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி,  வெளிநாட்டிற்குச் செல்வதாகக் கூறி அவரது குடும்பத்தினர்  26ஆம் நாள் சென்றதாகக் கூறினார்.

எனினும், அவரும் அவரது குடும்பத்தினரும் சம்பவத்துக்குப் பின்னர் சுவிஸ் தூதுவரின் இல்லத்திலேயே தங்கியுள்ளனர். அவரது இருப்பிடத்தைக் கண்டறிய முடியாதிருந்ததால், முன்னரே வாக்குமூலம் பெற முடியாமல் போனது.

அவரது மருத்துவ அறிக்கைகளில் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

விசாரணைக்காக அவரது அலைபேசியை வழங்குமாறு கேட்ட போதும் அவர் மறுத்து விட்டார்.அலைபேசி தூதரகத்தில் இருப்பதாக அவர் கூறினார்.

அனைத்து தகவல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னரே, பாதிக்கப்பட்ட நபராக கருதப்படும் இந்த நபரை சந்தேக நபராக பெயரிட சட்டமா அதிபர் முடிவு செய்துள்ளார்.

விசாரணைகளின் படி, அவர்,  குற்றவியல் நடைமுறை கட்டளைச் சட்டத்தின் பிரிவு 120 மற்றும் 190 ஆகியவற்றின் கீழ் குற்றமிழைத்துள்ளார்.

அவரை நம்ப முடியாது, அவரது அறிக்கை முரணானது, நாட்டின் பெயரைக் கெடுக்க அவர் ஏன் இத்தகைய சம்பவத்தை இட்டுக்கட்டினார் என்பதை நாங்கள் விசாரிக்க வேண்டும்.” என்று ” என்றும் அரச சட்டவாளர் கூறினார்.

இதன் போது, சுவிஸ் தூதரகப் பணியாளர் சார்பில் முன்னிலையான சட்டவாளர் உபுல் குமாரப்பெரும, குறிப்பிட்ட ஆசிரியரின் குடியிருப்புக்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று ஆண்களே அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர் என்று நீதிவானிடம் குறிப்பிட்டார்.

அப்போது, அவர் உடனடியாக ஏன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என்று நீதிவான் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சட்டவாளர் குமாரப்பெரும, எங்காவது முறைப்பாடு செய்தால், அவரது குடும்பத்தைக் கொன்று விடுவோம் என அடையாளம் தெரியாத நபர்கள் அச்சுறுத்தியிருந்தனர்.

அதிர்ச்சி மற்றும் பயத்தினால் இந்த சம்பவம் குறித்து எந்த உண்மையையும் வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

1 comment:

  1. That incident was true but now try blame the victry!

    ReplyDelete

Powered by Blogger.