ஆடம்பரமற்ற ஜனாதிபதி கோத்தாபயவின், திட்டங்களுக்கு சு.க. தொடர்ந்து ஆதரவளிக்கும் - தயாசிறி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் என்று தெரிவித்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, எவ்வித தனிப்பட்ட நோக்கங்களும் இன்றியே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சில் இன்று -04- உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
யுத்தத்தினால் பல்வேறு தேசிய கைதொழில்கள் கைவிடப்பட்டுள்ளன. அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இணைந்து இவ்வாறு கைவிடப்பட்ட கைத்தொழில்களை மீள ஆரம்பிக்க வேண்டும். அத்தோடு வெளிநாட்டு முதலீட்டார்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
தேர்தலின் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினுடைய வெற்றிக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது. ஆடம்பரமற்ற ஒரு ஜனாதிபதி மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளார்.
நாட்டுக்கு சுமையற்ற விதத்தில் எவ்வாறு செயற்படுவது என்பதை ஜனாதிபதி குறுதிய காலத்தில் தெரியப்படுத்தியிருக்கிறார்.
அரசாங்ககமொன்று இருக்கிறதா இல்லையா என்பது கூட மக்களுக்கு தெரியாதளவில் வேலைத்திட்டங்களுக்கே முக்கியத்துவமளிக்கப்படும். ஜனாதிபதி எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும் நாம் ஆதரவளிப்போம்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் தொடர்ந்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும்.
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காகவே நாம் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தோம். இதில் எவ்வித தனிப்பட்ட எதிர்பார்ப்புக்களும் கிடையாது. அதே போன்று தொடர்ச்சியாக செயற்படுவோம்.
Post a Comment