திங்கள் ஐதேக சிரேஷ்ட உறுப்பினர்கள் சந்திப்பு - தலைமைத்துவ பிரச்சினையை தீர்க்க விசேட குழு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக விசேட குழு நியமிக்கப்பட உள்ளதாகவும் அந்த குழுவின் ஊடாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஆராயவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 9 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மீண்டும் சந்திக்க உள்ளனர். அப்போது இந்த குழு உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படும். இந்த குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோர் நியமிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். எனினும் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியதால் மட்டும் திருப்தியடைய முடியாது என சஜித் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு முழுமையான அதிகாரங்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியையும் வழங்க வேண்டும் எனவும் எதிர்வரும் பொதுத் தேர்தலை வழிநடத்த அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Post a Comment