சகல இன மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய, சூழலை ஏற்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும்
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் முப்பது வருடங்களாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தை நாம் பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். நாட்டின் இறையாண்மையில் சர்வதேசம் சமூகம் தலையிட எந்தவித அருகதையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆயுதப்போரை முடிவுக்குக்கொண்டு வந்து விடுதலைப்புலிகளின் கொட்டத்தை அடக்கியதில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவுக்கு முக்கிய பங்கு உண்டு. மூவின மக்களுக்கும் தலைவராக அவர் தற்போது உள்ளார். அவரை எவராலும் அசைக்கவே முடியாது.
ஆயுதப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும் தேசிய பாதுகாப்பில் நாம் முக்கிய கவனம் செலுத்துகின்றோம். தேசிய பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியே தீருவோம்.
கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் போல் எந்தவித தாக்குதலும் இந்த ஆட்சியில் இடம்பெற நாம் இடமளியோம்.
நாட்டிலுள்ள சகல இன மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது பிரதான நோக்கமாகும். எந்தவிதக் கெடுபிடிகளும் இன்றி 24 மணிநேரமும் மக்கள் சுதந்திரமாக வாழும் நிலைமையே இந்த ஆட்சியில் ஏற்படும்.
கடந்த ஆட்சியில் இடம்பெற்றதைப் போன்று நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் நடவடிக்கையில் இந்த அரசு இறங்காது.
வெளிநாடுகளும், சர்வதேச அமைப்புகளும் எந்தவித அழுத்தங்களையும் இந்த அரசு மீது பிரயோகிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment