மோசமான அடக்குமுறை நடக்கிறது, பெரும்பான்மையும் கிடைத்துவிட்டால் நிலைமை என்னவாகும்...?
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுத்தருமாறு ஆளுந்தரப்பு மக்களிடம் கோருகின்றது. ஆட்சிபீடமேறிய புதிய அரசாங்கம் பெரும்பான்மைப்பலம் இல்லாத வேளையில் ஒரு மாதகாலத்திற்குள்ளாகவே பல்வேறு மோசமான அடக்குமுறை செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது.
அவ்வாறிருக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டால் எத்தகைய நியேற்படும் என்பதை சிந்தித்து, எதிர்வரும் பொதுத்தேர்தலில் நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் பாதிப்பற்ற பொருத்தமான தெரிவொன்றுக்கான மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார வலியுறுத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று -17- செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறிய ஒரு மாதகாலத்தில் அவர்கள் ஏற்கனவே செய்யமாட்டோம் என்று கூறியவற்றைச் செய்துகொண்டும், செய்வதாகக் கூறியவற்றைச் செய்யாமலும் இருக்கின்றது. குறிப்பாக சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணைகளை வெளிப்படைத்தன்மை உடையதாகவும், உரிய முறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அந்நாடு வலியுறுத்தும் அளவிற்கு நிலைமை தீவிரமடைந்திருக்கிறது. இத்தகைய செயற்பாடுகள் உள்நாட்டிற்குள் மாத்திரமன்றி, சர்வதேச மட்டத்தில் எமது நாட்டின் நன்மதிப்பிற்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. தேசப்பற்றாளர்கள் என்று கூறிக்கொண்டிருப்போரின் செயல்கள் இத்தகையதாகவே அமைந்துள்ளன.
அதேபோன்று தற்போது அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்திருக்கின்றன. அரச சேவையில் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த ஊழியர்கள் தற்போது எவ்வித காரணங்களுமின்றி நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஊதிய வழங்கல் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.
பதவி இறக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு ஜனாதிபதியையும், ஜனாதிபதி செயலாளரையும், பாதுகாப்புச் செயலாளரையும் சந்திப்பதற்கு முற்பட்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை. எனவே ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளரைச் சந்தித்து இவ்விடயம் குறித்து விளக்கமளிக்கும் கடிதத்தைக்கையளித்திருந்தோம். அவ்வாறு கையளித்து 15 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் கூட எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
அடுத்ததாக தற்போது ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படும் சம்பவங்களும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. எமது ஆட்சிக்காலத்தில் ஊடகங்கள் எம்மை மிக மோசமாக விமர்சித்தது. எனினும் நாம் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாதகாலத்திற்குள்ளாகவே பல ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஊடகநிறுவனங்கள் சோதனையிடப்பட்டிருக்கின்றன.
ஆனால் அத்தகைய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சிலவற்றில் பாதிக்கப்பட்டவரின் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்குக் கூட பொலிஸார் மறுத்துள்ளனர். புதிய ஆட்சியில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை விரைந்து விசாரணைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்துவதிலும் பார்க்க, பொலிஸார் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையொன்று ஏற்பட்டிருக்கிறது.
அதேபோன்று நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை காலமும் பொலிஸ் ஊடகப்பிரிவு உண்மையான தகவல்களை வழங்கிவந்தது. ஆனால் தற்போது அந்த பொலிஸ் ஊடகப்பிரிவு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸாரின் சீருடை ஆளுந்தரப்பின் கால்துடைப்பமாக மாற்றப்பட்டுள்ளது. ஊடகப்பிரதானிகளை இருமுறை ஜனாதிபதி சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இவையனைத்தும் 'எமக்கு வேண்டிய விதத்தில் செயற்படுங்கள். இல்லாவிட்டால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேரிடும்' என்று எச்சரிக்கும் விதமாகவே அமைந்துள்ளன.
எமது ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்கள், மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் தற்போது அவர்களுடைய ஆட்சியில் முன்பிருந்ததை விடவும் விலைகள் அதிகரித்துள்ளன. இதுபற்றி ஊடகங்களோ, தேரர்களோ, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமோ அல்லது ஏனைய தரப்புக்களோ வாய் திறக்காதது ஏன் என்று புரியவில்லை.
இந்நிலையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கு பாராளுமன்றத்தில் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுத்தருமாறு தற்போது ஆளுந்தரப்பு கோருகின்றது. அதனூடாக அவர்கள் பெரும்பான்மையற்ற ஓர் அரசாங்கம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆட்சிபீடமேறிய புதிய அரசாங்கம் பெரும்பான்மைப்பலம் இல்லாத வேளையில் ஒரு மாதகாலத்திற்குள்ளாகவே இவ்வாறு செயற்படுகின்றதெனின், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டால் எத்தகைய நிலையேற்படும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
Post a Comment