பௌத்த மதத்தினரே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர், தவறான ஆலோசனைகள் பற்றி ஜனாதிபதி கவனம்செலுத்த வேண்டும்
(இராஜதுரை ஹஷான்)
2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு ஒரு தரப்பினரது தவறான செயற்பாடுகளே பிரதான காரணியாக காணப்பட்டது. மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட அரசாங்கத்தில் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டால் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெடுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
நாரஹேன்பிடிய அபரயராம விகாரையில் இன்று -11- புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2015ம் ஆண்டு பல எதிர்பார்ப்புக்களின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் இரண்டு அரசியல் தலைவர்களும் செயற்படவில்லை. தங்களின் சுய நல தேவைகளை மாத்திரம் கருத்திற் கொண்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தி நாட்டு மக்களை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளார்கள்.
பல வழிமுறைகளில் பாதிக்கப்பட்ட மக்கள் இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சிறந்த அரசியல் ரீதியான தீர்மானத்தை மேற்கொண்டு நாட்டை பல சவால்கள் மற்றும் நெருக்கடிகளில் இருந்து பாதுகாத்துள்ளார்கள்.
சிங்கள பௌத்த மத கோட்பாடுகள் மற்றும் ஏனைய மதங்களின் தனித்துவம் அரசியல் தேவைகளுக்கு அப்பாற் சென்று பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பௌத்தமத தலைவர்களினதும் ஏனைய பிக்குகளினதும் நிலைப்பாடாக காணப்படுகின்றது.
பாரிய போராட்டத்தின் மத்தியில் ஆட்சி மாற்றம் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் ரீதியில் தவறான ஆலோசனைகளை வழங்குபவர்கள் மீண்டும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு நெருக்கமானவர்களாக காணப்படுகின்றார்கள். 2015ம் ஆண்டு இவ்வாறானவர்களின் செயற்பாடுகளின் காரணமாகவே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆகவே ஜனாதிபதி தவறான அரசியல் ஆலோசனை வழங்குபவர்கள் தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் அரசியல் செயற்பாடுகளின் காரணமாக தேசிய பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நெருக்கடி நிலைமையில் காணப்படுகின்றது. பொருளாதார முன்னேற்றத்திற்கு நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
மக்களின் தேவைக்காகவே நல்லாட்சி அரசாங்கம் இல்லாதொழிக்கப்பட்டு பலமான தலைமைத்துவத்தினை கொண்ட அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. நாட்டு நலனுக்காகவே அன்றி சுய நல தேவைகளுக்காக பௌத்த மதத்தினர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டுக்கும், மக்களுக்கும் நெருக்கடியினை ஏற்படுத்துவதாக காணப்பட்டால் அரசாங்கத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் என்றார்.
Post a Comment