Header Ads



'முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமைக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ காரணமல்ல' - சு.க.யே தவறு செய்தது

இலங்கை அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமைக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ காரணம் அல்ல என்றும், சிறிலங்கா சுத்திரக் கட்சியே இந்தத் தவறுக்கு காரணம் எனவும், முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது பங்காளிக் கட்சிகளுக்கு அமைர்சர் பதவிகளைப் பங்கிட்டுக் கொடுத்ததாகவும், இதன்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைத்த அமைச்சர் பதவிகளுக்கு, முஸ்லிம் ஒருவரைக் கூட சிபாரிசு செய்யாதது, அந்தக் கட்சியின் தவறாகும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அங்கம் வகிக்கும் பொதுஜன பெரமுன கட்சியில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை என்பதனால், அந்தக் கட்சியிலிருந்து முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டினார்.

"சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவிகளில் ஒன்றுக்கு, முஸ்லிம் ஒருவரை அந்தக் கட்சி சிபாரிசு செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை".

"ராஜாங்க அமைச்சர் பதவிக்காக எனது பெயரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி சிபாரிசு செய்த போதும், அதனை நான் நிராகரித்து விட்டேன்" என்று தெரிவித்த பைஸர் முஸ்தபா; "கடந்த அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை வகித்த நான், இப்போது ராஜாங்க அமைச்சர் பதவியை எவ்வாறு வகிப்பது?" என்று கேள்வியெழுப்பினார்.

"ராஜாங்க அமைச்சர் பதவிக்காக காதர் மஸ்தானின் பெயரை சிபாரிசு செய்யுமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் கூறினேன். ஆனால், அதையும் அவர்கள் செய்யவில்லை. அந்த வகையில், இங்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சிதான் பிழையாக நடந்துள்ளது".

"அரசாங்கத்தின் தீர்மானங்கள் அமைச்சரவையில்தான் எடுக்கப்படும் என்பதனால், அங்கு முஸ்லிம் ஒருவர் அமைச்சராக இருக்க வேண்டும். ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர் பதவிகளை முஸ்லிம்கள் வகிப்பதால், தமது சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. ராஜாங்க அமைச்சர்களுக்கு சம்பளமும் வாகனங்களும் வசதிகளும்தான் கிடைக்கும்".

"எனவே, அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் இருக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். ஆனாலும் அமைச்சர் பதவி கேட்டு யாருடனும் நான் பேசவில்லை," என்றும் அவர் கூறினார்.

"ஆனால், அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லை என்கிற குறையை, சிறிலங்கா சுதந்திரக் கட்சிதான் தீர்த்து வைக்க வேண்டும். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவிகளுக்கு முஸ்லிம்களை சிபாரிசு செய்யுமாறு, ஜனாதிபதியின் பொதுஜன பெரமுன கட்சி கூற முடியாது".

"அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லை என்பது சிக்கலான விடயம்தான். ஆனாலும், நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் இந்தக் குறையைத் தீர்த்து வைக்கப் பார்ப்போம்" என்றும் அவர் தெரிவித்தார்.

3 comments:

  1. பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை எடுக்கும் வரை முஸ்லீம் விரோதம் பொதுத் தேர்தல் வரை தவிக்க முடியாது தொடரும் என்பதே காரணம்.

    ReplyDelete
  2. உண்மையும் அதுதான் அறிவழகன்.

    ReplyDelete
  3. அறிவு அறிவழகன் தான். சூப்பர்

    ReplyDelete

Powered by Blogger.