அமைச்சர்களே செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள் - ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்தல்
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான அலுவலக வசதிகளைத் தற்போது அவர்களுக்குள்ள இடத்துக்கு அமைவாகவே செய்துகொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி செயலகம் சுற்று நிருபமொன்றை அனுப்பி வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் அவரது செயலாளர் பி.பீ.ஜயசுந்தர இந்த சுற்று நிருபத்தை அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன் பல அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய அமைச்சுக்களை வைத்திருப்போர், ஓர் அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய அமைச்சரவைக்கு உரிய ஊழியர்கள் மற்றும் வசதிகளுக்கு மட்டுமே உரிந்துடையவர்கள் என்றும் அந்த சுற்று நிருபத்தில் கூறப்பட்டுள்ளது. ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏனைய வசதிகள் கூடிய வரையில் குறைந்த அளவிலேயே பேணப்படவேண்டும் என்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என்றும் அந்த சுற்று நிருபத்தில் கூறப்பட்டுள்ளது.
தற்போது பதவியில் இல்லாத அனைத்து முன்னாள் அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஊழியர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள வாகனங்களை உத்தியோகபூர்வமாக திரும்பப்பெறுவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தமது அமைச்சுக்களில் மிகையாக உள்ள வாகனங்களை நிதி அமைச்சிடம் திரும்ப ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது மக்களின் நிதியைக் குறைந்த அளவிலும் அதிகபட்ச வினைத்திறன் மற்றும் உற்பத்தி திறனுடனும் பயன்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த சுற்று நிருபத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, மேற்படி சுற்று நிருபத்தின் பிரதிகள் பிரதமரின் செயலாளர், அனைத்து அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள், கணக்காய்வாளர் நாயகம் மற்றும் தலைமைக் கணக்கு அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Post a Comment