Header Ads



கோட்டாபயவும், சுவிட்சர்லாந்து தூதுவரும் திடீர் சந்திப்பு


சுவிட்சர்லாந்து தூதுவர் இன்று -16- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இக் கலந்துரையாடலில்...

இலங்கைக்கு எந்த தீங்கும் விளைவிக்கும் நோக்கம் சுவிட்சர்லாந்துக்கு இல்லை என இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மோக், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 25 ம் திகதி சுவிஸ் தூதரக ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த சுவிட்சர்லாந்து தூதுவர், இரு நாடுகளின் நலனுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட விரும்புகிறோம். இந்த பதற்றமான சூழ்நிலையை நாம் முறியடிக்க வேண்டும் என கூறினார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இதுவரை நடந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக அவருக்கு விளக்கமளித்தார்.

குறிப்பாக கடத்தல் என்று கூறப்படுவது கட்டுக்கதை என்பது இப்போது நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் ஊபர் அறிக்கைகள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் போன்ற மறுக்க முடியாத சான்றுகள் இந்த உண்மையை சுட்டிக்காட்டுகின்றன என்றும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

என்னையும் எனது அரசாங்கத்தையும் இழிவுபடுத்துவதற்கு தூதரக அதிகாரி, சில தரப்பினரால் கட்டாயப்படுத்தப்பட்டிருக்க கூடும்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த சம்பவம் முதன்முதலில் தெரிவிக்கப்பட்டபோது சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஆரம்ப எதிர்வினையில் எந்த தவறும் இல்லை என கூறிய ஜனாதிபதி அவர்களின் எதிர்வினை நியாயமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை குறித்த விசரணைகளை அதன் முடிவுக்கு கொண்டுசெல்ல தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.