Header Ads



சஹ்ரனின் புண்ணியத்தில் கோட்டபாய வெற்றி பெறவில்லை - லீ குவான் யூவை விட ராஜபக்ஷக்களை மக்கள் பெருமையாப் பேசுவார்கள்.

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவோம், புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் அதிகளவு வாக்குகளால் வெற்றி பெற்றமைக்கு காரணம், அவரது தொலைநோக்குடனான  திட்டங்களும் வெளிநாட்டு கொள்கைகளுமே என்கிறார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான  பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல...

கேள்வி- இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கடுமையான  போட்டி நிலவும் என  எதிர்வு கூறினாலும் கோட்டாபய ராஜபக்ஷ அதிகப்படியான வாக்குளால் வெற்றி பெற்றுள்ளார். இது பற்றிய உங்கள் கருத்தென்ன?  

பதில் – எமக்கு இந்த தேர்தலில் எப்போதுமே போட்டியானதாக  இருக்கவில்லை. அதேபோல் எச்சந்தர்ப்பத்திலும் இரண்டாவது விருப்பு வாக்கு பற்றி நாம் கனவில் கூட எண்ணவில்லை. அது பற்றி மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அணியினரே பேசினார்கள். அவர்கள் யானையின் வாலாக இருக்கவே விரும்பினார்கள். அதேபோல் ஐம்பதுக்கு ஐம்பது பற்றிய பிரசாரத்தை ஐக்கிய தேசிய கட்சியினரே முன்னெடுத்துச் சென்றார்கள்.  தங்கள் வேட்பாளர் தோற்பார் என்று அவர்களால் கூற முடியாது. அதனால் போலிப் பிரசாரங்களை செய்தார்கள். ஆனால் நாம்  கோட்டபாய ராஜபக்ஷ பத்து இலட்சம் வாக்குகளால்  வெற்றி  பெறுவார் எனக் கூறினோம். நாம் 108 கூட்டங்களை நடத்தினோம். அதன் மூலம் நாம் எமது வெற்றியை உறுதி செய்தோம்.  

கேள்வி – இந்த வெற்றியின் பின்னர் உங்களுக்குள்ள சவால்கள் என்ன?  

பதில் – உண்மையில் இந்த வெற்றி எமக்கு எவ்விதத்திலும் சாவாலாக இல்லாவிட்டாலும் வெற்றியின் பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்ய பல சவால்களுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது. முக்கியமானது நாட்டின் தேசிய பாதுகாப்பு. அது பாரிய பிரச்சினையாகவுள்ளது. அதனை சரி செய்து நாட்டின் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை வளப்படுத்துவது,  இரண்டாவது முக்கிய சவாலாகும். மூன்றாவது நாட்டைப் பற்றிய நல்லெண்ணத்தை உருவாக்குவதாகவும். அதேபோல் சமூக, பொருளாதார, கலாசாரம் வீழ்ந்துள்ள, நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது? விசேடமாக சூழலை பாதுகாப்பது, வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்தை உயர்த்துவது, வீழ்ச்சியடைந்துள்ள அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவது போன்று, புதிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதும் சவாலாகும்.  

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டை உருவாக்குவதும் அதில் அடங்கும்.  

கேள்வி – இத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வடக்கில் மிகக் குறைந்தளவு வாக்குகளே கிடைத்தன. ஆனால் தெற்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் அதிகளவு வாக்குகள் கிடைத்தன. இந்த வித்தியாசத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?  

பதில் – வடக்கிலும் கிழக்கிலும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கில் தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் இனவாத பிரசாரங்களை மேற்கொண்டதுடன் தெற்கிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினரும் வடக்கிற்கு சென்று அதனை மேலும் தூண்டினார்கள்.  மக்கள் தாம் சுயமாக முடிவெடுக்க முடியாத வகையில் அழுத்தங்களை ஏற்படுத்தினார்கள். இதேவேளை இதற்காக சர்வதேசத்திலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் பெருமளவு பணம் உபயோகப்படுத்தப்பட்டது. வடக்கில் தமிழ் கூட்டமைப்பின் 13 கோரிக்கைகள் தொடர்பில் ஐ.தே.க.வின் பதிலும், கோட்டாபய ராஜபக்ஷ அந்த கோரிக்கையை கணக்கில் கொள்ளாதமை குறித்தும் இந்நாட்டு மக்கள் கண்டார்கள். இன்னொரு புறம் தமது வாக்கின்றி வெற்றி பெற முடியாதென கூறியதும் தெற்கு மக்களின் மனதில் ஆழப்பதிந்தது. இதற்காக மகா சங்கத்தினரும் சிங்கள பௌத்த மக்களை வழி நடத்தினார்கள். இவையெல்லாமே அவரின் வாக்குகளை அதிகரிக்கச் செய்தன.  

கேள்வி – உங்கள் கட்சியின் அபேட்கர் வெற்றிபெற்றது சஹ்ரனின் புண்ணியத்தில் தான் என்று ஐ.தே.கட்சியினர்  கூறுகின்றார்களே ?.  

பதில் – அது தவறானது.  அந்த பயங்கர நிலைமையில் நாட்டை நேகிக்கும் யாருமே கடந்த அரசாங்கம் சரியானதென்று கூறவில்லை. அவ்வரசாங்கம் தேசிய பாதுகாப்பை பூச்சியமாக்கியிருந்தது. அன்று மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த வேளையில் தேசிய பாதுகாப்புக்கு முக்கிய இடம் அளித்திருந்தார். ஆனால் ஏப்ரல் 21 தாக்குதல் வரை இந்த அரசாங்கம் என்ன செய்திருந்தது? நாம் அதுபற்றி கூறும் போது கணக்கெடுக்கவில்லை. சஹ்ரனால் கோட்டபாய வெற்றி பெற்றார் என்றால் நீர்கொழும்பில் அதிக வாக்குகள் பெற்றிருக்க வேண்டாமா? ஆனால் அவ்வாறில்லையே எமது வெற்றிக்கு பாரிய சாதகமான நிலைமைகள் காணப்பட்டன. அவற்றில் சில எமது அரசியல் கலாசாரத்துக்கு புதியனவாகும்.  

கேள்வி – நாட்டுக்காக ஜனாதிபதி ஆற்றிய உரை அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளதல்லவா?

பதில் – அது சரி கோட்டபாய ராஜபக்ஷவின் மாற்றம் அதுதான். அவர் சொல்ல வேண்டியதை சரியாகச் சொல்வார். அரசியல் இலாபம் அவருக்கு தேவையில்லை. அவருக்கு நாடே முக்கியம். அதேபோல் பொது மக்களும் அவரை குற்றம் சாட்டியதை நாம் எங்கு காணவில்லை. இன்று புதிய அரசியல் கலாசாரம் தோன்றியுள்ளது. அது ஏனைய அரசியல் கட்சிகளினதும் பாராட்டை பெற்றுள்ளது. மக்கள் இவ்வாறான ஒரு தலைவரையே விரும்பினார்கள். நாம் லீக் குவான் யூ, மஹதீர் மொஹமட், புட்டின் போன்ற தலைவர்களைப் பற்றி பெருமையாக பேசுகின்றோம். இன்னும் சில வருடங்களில் அந்த தலைவர்களைவிட ராஜபக்ஷக்களைப் பற்றி மக்கள்  பெருமையாப் பேசுவார்கள்.

கேள்வி – புதிய ஜனாதிபதியின் வெளிநாட்டு கொள்கைகளைப் பற்றி என்ன எண்ணுகின்றீர்கள்?  

பதில் – அது பற்றி அவருக்கு தெளிவான நோக்கு உண்டு. அவர் எல்லாவற்றையும் விட தாய்நாட்டைப் பற்றியே எண்ணுபவர். நாட்டின் இறைமையையும் பெருமையையும் முதன்மையாகக் கொள்பவர். அதேபோல் ஏனைய நாடுகளுடன் நட்புறவுடன் செயல்படும் கொள்கையையும் பின்பற்றுவார்.  

கேள்வி – இம்முறை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தாலும் எதிர்வரும் தேர்தல்களில் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்த அணிக்கு வாக்களிக்க மாட்டோம் என சிலர் கூறுகின்றார்களே?  

பதில் – அது மக்களின் பொறுப்பு ஜனாதிபதி தேர்தலில் சரியான நபரை தெரிவு செய்தது போன்று பொதுத் தேர்தலிலும் சரியான வேட்பாளரை தெரிவு செய்யும் பொறுப்பு மக்களுடையது. அன்று போலல்ல இன்று மக்கள் சரியான முடிவை எடுக்கின்றார்கள். ஆனால் நாம் கட்சி என்ற ரீதியில் உயர்ந்த இடத்தில் உள்ளோம். இந்த கட்சி உருவாக்கப்பட்டு சில வருடங்களேயாகின்றன. ஆனாலும் மக்களிடையே பெரும் நம்பிக்கையை பெற்றுள்ளது. நாம் கட்சியாக உருவாக்கிய ஜனாதிபதி மீது மக்களுக்கு நம்பிக்கையுண்டு அவர் ஒழுக்கமான தலைவர் அதனால் கட்சியும் ஒழுக்கத்துடனேயே பயணிக்கும்.  

கேள்வி – எவ்வாறாயினும் விரைவில் பொது தேர்தல் வரவுள்ளது. அதற்காக ஆயத்தம் எவ்வாறுள்ளது?  

பதில் – எமக்கு அந்த தேர்தலில் எவ்வித சவாலுமில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடைய அரசாங்கம் ஒன்றை அமைக்க தயாராகவுள்ளோம். தற்போது  எம் பக்கம் அநேகமானோர் உள்ளார்கள். அதேபோல் ஐ.தே.கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.  

இந்த வெற்றியுடன் நாட்டில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். குறுகிய காலத்தில் இவ்வாறானதொரு வெற்றியை பெற்ற ஒரு கட்சியை சரித்திரத்தில் எங்கேயும் காண முடியாது.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று உலகில் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்திக்க பொல்கொட்டுவ - தினமின    


No comments

Powered by Blogger.