Header Ads



இது கல்முனை, மாநகரசபையின் கவனத்திற்கு...!

- அப்துல் நஸீர் -

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது எனும் ஊரை ஊடறுத்துச் செல்லும் தோனாவிலிருந்து  (lagoon) கடந்த 07.12.2019 (சனிக்கிழமை) அன்று கல்முனை மாநகரசபை முதல்வரின் கண்காணிப்பில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து குப்பைக்கழிவுகள் மற்றும் Eichornia (ஆற்றுவாழைகள்) என்பன அள்ளப்பட்டன. இவை ஊடகங்களிலும் ஆரவாரமாக காட்டப்பட்டன. ஆனால் அள்ளப்பட்ட இக்கழிவுக்குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதோ இத்தோனாவின் அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு முன்னாலும் அத்தோனா வீதியின் முழுவதுமாகும். பெயரளவுக்கு ஒரு சில உழவுஇயந்திரங்களில் அள்ளப்பட்டபோதும் ஏனைய இக்கழிவுக்குப்பைகள்  இன்றுவரை அம்மக்களின் வீடுகளுக்கு முன்னாலும் வீதி நெடுகிலும் மலைத்தொடர்கள் போல் குவிந்து காணப்படுகின்றன. 

இதனால் சாய்ந்தமருதின் கிட்டத்தட்ட இரு எல்லைகள்வரை நீண்டிருக்கும் இப்பாதையினூடான போக்குவரத்து முற்றாக  ஸ்தம்பிதமடைந்துள்ளது. குடியிருப்பாளர்களில் வாகனங்களை  வைத்திருப்போர்கள் மற்றும் வாகனங்களை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேற்கொள்வோரும் பெரும் பாதிப்பிற்குளாகியுள்ளனர். இவ்வீதியின் மூலம் நடைபெறும் அன்றாட வியாபார நடவடிக்கைகள் மற்றும் அன்றாட  சிறு கைத்தொழில்களில் ஈடுபடும் ஏழைமக்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

மேலும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருப்பதால் குழந்தைகள் உட்பட முதியவர்கள்வரை வீடுகளில் இருப்பதற்கு அவஸ்தைப்படுகின்றனர். அத்துடன் இக்கழிவுக்குப்பைகளிருந்து பாம்புகள், புழு பூச்சிகள், விஷஜந்துகள் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குள் நுழைந்துகொண்டிருக்கின்றன.

அடுத்த பாரிய பிரச்சினையான டெங்கு நுளம்புகள் படையெடுக்ககூடிய வகையில்  இக்கழிவுக்குப்பைகளினுள் சிரட்டைகள், பிளாஸ்டிக்பாத்திரங்கள், டயர்கள், யோகட்கோப்பைகள் நீர் தேங்கிய நிலையில் காணப்படுகின்றன.

இவை தொடர்பாக கல்முனை மாநகர சபையினருக்கு உரிய முறையில் முறையிட்டபோதும், அவர்கள் அலட்சியமாகவும் பொறுப்பற்ற முறையிலும் பதிலளித்ததாகவும் மேலும் " நாங்கள் எடுக்கும் போதுதான் எடுப்போம், நீங்கள் வேண்டியதை செய்துகொளுங்கள்" என்று கூறியதாகவும் குடியிருப்பாளர்கள் விசனப்படுகின்றனர்.

இம்மக்களின்  பிரச்சினைகளை அலட்சியமாக கருதுவோரின் வீடுகளுக்கு முன்னாலும் இத்தகைய குப்பைமேடுகளை குவித்து வைத்தால் அப்போது அவர்களின் மனநிலை எவ்வாறு அமையும்? என்பதை , சம்பந்தப்பட்ட பொறுப்புதாரிகள் உணர்ந்து விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா??  

No comments

Powered by Blogger.