சவுதி அரம்கோ நிறுவனம்: பங்குச்சந்தை வரலாற்றில் சாதனை படைத்தது
சௌதி அரம்கோ நிறுவனம் பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட தொடங்கிய முதல் நாளிலேயே அதன் பங்குகளின் மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
சௌதி அரேபிய அரசுக்கு சொந்தமான உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சௌதி அரம்கோ, சமீபத்தில் தனது நிறுவனத்தின் பங்குகளை முதல் முறையாக விற்பனை செய்தது. சௌதி அரம்கோ நிறுவனத்தின் பங்குகள் இன்று (புதன்கிழமை) அந்நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கு வந்தபோது, 25.6 பில்லியன் டாலர்களை திரட்டி அந்நிறுவனம் பெரும் சாதனை படைத்துள்ளது.
வெறும் எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திராமல், புதிய வணிக முன்னெடுப்புகளை எடுக்கும் முயற்சியில் சௌதி அரேபிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், உலகின் மிகப் பெரிய லாபம் படைக்கும் அரசுத்துறை நிறுவனமான சௌதி அரம்கோவை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.
இதன் மூலம் திரட்டப்படும் பணத்தை எரிசக்தி தவிர்த்த மற்ற துறைகளில் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், சௌதி அரம்கோ நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட தொடங்கிய முதல் நாளான இன்றே, 10 சதவீத உயர்வை கண்டது.
ரியாத் பங்குச்சந்தையின் விதிகளின்படி, ஒரு நிறுவனத்தின் பங்குகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 சதவீத உயர்வை மட்டுமே அடைவதற்கு அனுமதி உள்ளதால், சௌதி அரம்கோ நிறுவனத்தின் பங்குகள் வணிகத்தில் ஈடுபட தொடங்கிய சில மணிநேரங்களிலேயே நிறுத்தப்பட்டது. இதன் மூலம், அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.88 ட்ரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
எனினும், அரம்கோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு இரண்டு ட்ரில்லியன் டாலர்களை அடைய வேண்டும் என்ற சௌதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் இலக்கை அடைய 0.12 ட்ரில்லியன் டாலர்கள் இன்னும் தேவைப்படுகிறது.
சோதனை முயற்சியில் வெற்றி
தனது நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிடும் நடவடிக்கையின் முதல் சோதனை முயற்சியில் சௌதி அரம்கோ வெற்றி பெற்றுள்ளது.
தனது நிறுவனத்தின் 1.5 சதவீத பங்குகளை வாங்குவதில் வெளிநாடுகள் பெரியளவில் ஆர்வம் காட்டாத நிலையில், உள்நாட்டு மற்றும் பிராந்திய முதலீட்டாளர்களை நம்பியே சௌதி அரம்கோ நிறுவனம் பங்குச்சந்தை வணிகத்தில் களமிறங்கியது.
தொடக்கத்தில் சௌதி பங்குச்சந்தை அல்லது ரியாத் பங்குச்சந்தை மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஒரு பங்குச்சந்தை ஆகியவற்றின் மூலம் 100 பில்லியன் டாலர்களை திரட்டுவதற்கு அரம்கோ திட்டமிட்டிருந்தது.
எனினும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், காலநிலை மாற்றம், அரசியல் சூழ்நிலை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து கவலைகளை எழுப்பிய பின்னர் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
மாறாக, சௌதி அரேபிய முதலீட்டாளர்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்திலுள்ள நட்பு நாடுகளின் மீது கவனத்தை திருப்பியது. மேலும், சௌதி மக்கள் அரம்கோவின் பங்குகளை வாங்க அந்நாட்டு வங்கிகள் குடிமக்களுக்கு மலிவான கடன் வழங்கின.
மிகப் பெரிய திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் புதிய தொழில்களை உருவாக்குவதற்கும் தேவையான பல்லாயிரக்கணக்கான டாலர்களை திரட்டும் நடவடிக்கையில் சௌதி அரேபியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சாண் ஏற முழம் சறுக்கும் ஒரு நாளைக்கு.
ReplyDelete