சிறிகொத்தா இன்று போர்க்களமாகுமா...?
எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி என்பன குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிற்பகல் 3 மணியளவில் இந்த நாடாளுமன்ற குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கு, எதிர்ககட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கையொப்பத்துடனான கடிதம் ஒன்று அண்மையில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம், கடிதம் மூலம் சபாநாயகரிடம் கோரியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும், அதற்கு சிலர் எதிர்ப்பு வெளியிடுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில், குறித்த விடயங்கள் தொடர்பில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment