முரண்பாடுகளை அழிவுபூர்வமாக முகாமைசெய்து இனவாதத்திற்குள் விழுவதா? அல்லது இணைந்து அபிவிருத்திகளை மேற்கொள்வதா?
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உலக ஒழுங்கமைப்பில் இலங்கையின் அனைத்து சமூக இளைஞர் யுவதிகளும் ஆற்றல் மிக்க பங்காளர்களாக உருவாக வேண்டும் என்பதே பிரிட்டிஷ் கவுன்சில் சமூக நடவடிக்கைக் கட்டமைப்பின் நோக்கமாகும் என பிரிட்டிஷ் கவுன்சில் சமூக ஆய்வாளரும் அதன் வளவாளருமான ஜெயராஜ் பிரியங்கா தெரிவித்தார்.
பிரிட்டிஷ் கவுன்சில், சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனம், தொழிற் பயிற்சி அதிகாரசபை ஆகியவை இணைந்து நடாத்தும் செயற்பாட்டுக் குடிமக்கள் பயிற்சித் திட்டம் ஞாயிற்றுக்கிழமை 01.12.2019 வந்தாறுமூலை தேசிய தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பயிற்சித் திட்டத்தல் பங்கெடுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் 30 பேர் மத்தியில் 'செயற்பாட்டுக் குடிமக்கள் பயிற்சி ஆற்றல்மிக்க பங்காளர்கள் திட்டத்தின்' நோக்கம் பற்றி வளவாளர் பிரியங்கா தெளிவுபடுத்தினார்.
அங்கு பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின் அறிமுகத்தை செய்து வைத்த அவர் தொடர்ந்து தெளிவுபடுத்துகையில், பிரிட்டிஷ் கவுன்ஸின் சமூக நடவடிக்கைக் கட்டமைப்பு இலங்கையுட்பட உலகளாவிய ரீதியில் 64 நாடுகளில் ஆற்றல் மிக்க பிரஜைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.
பயிற்சி பெறுபவர்கள் தமது நாட்டுக்காகப் பாடுபடுவதோடு அனைவரும் சேர்ந்து உலகாளவிய ரீதியில் ஒருங்கிணைதலும் அதன் மூலம் சமூகத் தேவைகளை அடையாளம் கண்டு செயற்திட்டமாக்கி அபிவிருத்தி நோக்கிச் செயற்படுத்தலும் இடம்பெற்று வருகின்றது.
இது பாரம்பரியக் கல்வி முறைபோன்று அமர்ந்து கற்றுக் கொள்ளும் செயன் முறையல்ல. குழுக்களாக உங்களது சமுதாயத்திற்குள் சென்று அங்கு உங்களுடைய சமுதாயத்தின் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய தேவைகள் என்ன என்பதை அறிந்து அவற்றைச் செயற்திட்டமாக்கி அமுல்படுத்தல் வேண்டும்.
ஆகையினால் இது வெறும் ஏட்டுக் கல்வி அல்ல.மக்களின் எதிர்பார்ப்பு மக்களின் தேவைகள் பிரச்சினைகள், தீர்மானம் மேற்கொள்ளுதல், சமூக வேறுபாடுகள், மத ரீதியிலான விவகாரங்கள் என்பனவற்றைக் கற்றுக் கொண்டு அவற்றுக்கு ஆக்கபூர்வமான வழிமுறைகளைக் கையாண்டு தீர்வு காண்பதோடு முரண்பாட்டுக்கு ஆக்கபூர்வமாகத் தீர்வு காணக் கூடிய அடுத்த இளைய சமுதாயத்தினரைத் தயார்படுத்துவது எவ்வாறு என்பதும் இந்த செயற்திட்டத்தில் பொதிந்திருக்கின்றது.
நாட்டின் எதிர்காலம் நலமாக அமைவது என்பது அதனை இப்பொழுதிருந்தே இளைஞர்கள் ஆக்கபூர்வமாக வடிவமைப்பதிலேயே தங்கி உள்ளது.
முரண்பாடுகளை அழிவுபூர்வமாக முகாமை செய்து இனவாதத்திற்குள் விழுவதா? அல்லது இணைந்து அபிவிருத்திகளை மேற்கொள்வதா? நாம் அனைவரும் இலங்கையர் என்கின்ற எடுகோளுக்குள் நமது சிந்தனையை விரிவுபடுத்தியிருக்கின்றோமா? என்பதையெல்லாம் இந்தப் பயிற்சி நெறி செம்மைப்படுத்தித் தருகிறது.
தனிப்பட்ட ரீதியில் தங்களுக்குள் மறைந்திருக்கின்ற கலாசார விழுமியங்கள் என்ன? அதனபை; பாதுகாத்துக் கொண்டு அடுத்த இனத்தவரின் கலாசாரமும் விழுமியங்களும் சிதைவுறாமல் மதிப்பளித்துக் கொண்டு எவ்வாறு இலங்கையைக் கட்டியெழுப்புவது, அதனை மதித்தொழுகி நமது தனித்துவத்தைப் பேணிக் கொண்டு தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்க வேண்டும்.
நான் யார், எனது கலாசாரம் விழுமியம், சமூகம் என்பனவற்றை சரிவரப் புரிநி;து கொண்டு அடுத்த சமூகத்தாரின் கலாசார விழுமியங்களை மதிப்பதனூடாகவே, சொந்த தனித்துவங்கள் பாதுகாக்கப்படும் என்கின்ற உண்மையை சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் எயிட் நிறுவனமும் அதன் பெயர் அடிப்படையிலன்றி அது உலகளாவிய அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் சர்வதேச தன்னார்வத் தொண்டு அமைப்பாகும். இவ்வாறான இணைதலே உலக ஒழுங்கியலில் நமது ஆற்றல்களை வெளிக்கொண்டு வர உதவும்' என்றார்.
Post a Comment