யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இப்போது எப்படி உள்ளது தெரியுமா..?
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முடங்கிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டு, நொவம்பர் மாதம் 11ஆம் நாள் தொடக்கம் சென்னை- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பயணிகள் விமான சேவை இடம்பெற்று வருகிறது.
இந்த விமான நிலையத்தில் பணியாற்றும், சுங்க, மற்றும் குடிவரவு அதிகாரிகள் உள்ளிட்ட 100 வரையான அதிகாரிகள், தற்போது, விமான நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள யாழ். நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.
இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான கட்டுமானப் பணிகள் முடங்கிப் போயுள்ளன.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கேள்வி எழுப்பிய போது,
“அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமல் யாழ்ப்பாணம் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை எனது அமைச்சின் சார்பில், ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா கொடை பயன்படுத்திக் கொள்ளப்படும். விரைவில் அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்று கூறினார்.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திக்காக 2250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
அதேவேளை, விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதி இல்லாமையால், இவர்களுக்காக யாழ். நகரில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வீடு மற்றும் உணவு, ஏனைய செலவினங்களுக்காகவே இந்த நிதியில் பெரும்பகுதி, செலவிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட விமான நிலைய புறப்பாடு மற்றும் வருகைப் பகுதியில் பணியாற்றும் 100 அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.
இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் நொவம்பர் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அங்கீகாரமும் அளிக்கப்பட்டிருந்தது என, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் கூறினார்.
எனினும், புதிய அரசாங்கம், பதவிக்கு வந்த பின்னர், அந்தக் குழு கலைக்கப்பட்டதுடன், அதன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
அலையன்ஸ் எயர் நிறுவனம் வாரத்துக்கு மூன்று சேவைகளை நடத்துகிறது. இதில் 50 தொடக்கம் 60 வரையான பயணிகள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.பெரும்பாலும் ஆசனங்கள் நிரம்புகின்றன.
ஆனால், பயணிகள் மழைக்கு ஒதுங்கிக் கொள்வதற்கோ, அவர்கள் ஓய்வெடுக்கவோ, புறப்படுகைக்காக தங்கியிருக்கவோ இடவசதிகள் இல்லை என யாழ். விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகாரி அவர்களை புறப்படும் பகுதிக்கு அழைக்கும் வரை, பயணிகள் மழையின் திறந்த வெளியில் நின்று முற்றிலுமாக நனைந்து போகிறார்கள்.
கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து குறைபாடுகளையும் மீறி, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஒரே ஒரு கட்டடத்தில் செயற்பட்டு வருகிறது.
அத்துடன் விமான நிலையத்துக்குச் செல்லும் வீதியும் குன்றும் குழியுமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment