Header Ads



தற்கொலை தாக்குதல் பற்றி 4 முறை எச்சரித்த இந்தியா - 7 சட்டத்தணிகளுடன் வந்து சாட்சியமளித்த மல்கம் ரஞ்சித்


உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் தெரிவித்தார்.

தாக்குதல் இடம்பெற்ற கால கட்டத்தில் நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் இருந்தமையும் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனமைக்கான காரணங்களில் ஒன்றாகும்.  

இந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தையும் நிறுத்தி நான் மக்களின் உயிரை காத்திருப்பேன் என்றும் அவர் கூறினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது.

இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலில் அவரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்படி விடயங்களை சாட்சியமாக பதிவு செய்தார்.  

நான்கு மணி நேரம் பதிவு செய்யப்ப்ட்ட அவரின் சாட்சியத்தில் இரு மணிநேர இரகசிய சாட்சியமும் உள்ளடங்கியிருந்தது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி அகியோர் முன்னிலையில் இன்று 2.00 மணி முதல்  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சாட்சியமளித்தார்.

இதன்போது பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் சார்பில்  ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா தலைமையில்  கிம்ஹானி கமகே,  துதிக பெரேரா,  சமத் பெர்ணான்டோ,  சந்துன் நாகஹவத்த,  பிரேமால் ரத்வத்த,  வருண சேனாதீர ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எப்.எம்.பஸீர்)

2 comments:

  1. மதிப்புக்குறிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்களின் சாட்சிகள் உண்மையாக நிரூபிக்கப்பட்டால், நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அனைவரையும் கைதுசெய்து,சட்டத்தின் படி அதிஉயர் தண்டனையை சட்டம் வழங்க வேண்டும் என இந்த நாட்டின் பொதுமக்கள் சார்பாக மிகவும் கௌவரமாக இந்த நாட்டு உயர் நீதிமன்றத்தை வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  2. முதலில் இந்தியாவை விசாரிக்க வேண்டும் தாக்குதல் சம்பவம் இந்தியாவுக்கு முதலில் தெரியும் என்றால் இந்தியா ஏன் மறைக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.