கணக்காளருக்கு 367 வருட கடூழிய சிறை - கொழும்பு நீதிமன்றம் அதிரடி
போலியான ஆவணங்களை பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான 21 இலட்சத்துக்கும் அதிக பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குறித்த நிறுவனத்தை சேர்ந்த கணக்காளர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 367 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷீ மகேந்திரன் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹிக்கடுவ லியனகே நந்தசிறி என்ற குறித்த நபர் தற்போது நீதிமன்றை புறக்கணித்து தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு திறந்த பிடியாணை ஒன்று நீதிபதியால் வௌியிடப்பட்டுள்ளது.
மேலும் பிரதிவாதிக்கு 21 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக பணி புரிந்த பிரதிவாதி போலியான ஆவணங்களை பயன்படுத்தி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 21 இலட்சத்து 99 ஆயிரத்து 130 ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தி சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் 19 குற்றப்பத்திரிக்கைகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைகளின் போது பிரதிவாதி நீதிமன்றை புறக்கணித்து தலைமறைவாகிய நிலையில், நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பினை அறிவித்த நீதிபதி பிரதிவாதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏனைய நபர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் ஒரு தீர்ப்பைக் பெற்றுக் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதி, இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
Post a Comment