Header Ads



மட்டக்களப்பு மாவட்டத்தில் 1050 குடும்பங்களை சேர்ந்த 3765 பேர் பாதிப்பு


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மட்டக்களப்பு மாவட்டத்தில்  தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையினால் ஆறு பிரதேச செயலகங்களில் வசிக்கும் 1050 குடும்பங்களை சேர்ந்த 3765 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் திங்கட்கிழமை பகல் மாவட்டச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, கிரான், வாழைச்சேனை, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் இத்தகைய இடம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களைத் தற்காலிக முகாம்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சமைத்த உணவுகள், குடிநீர், ஏனைய அடிப்படை வசதிகளை அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின்; பணிப்புரைக்கமைவாக மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண நிலையத்தினுடாக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த நிலையப்பணிப்பாளர் ஏ.எம்.எஸ் சியாத் தெரிவித்துள்ளார்.

தாழ் நில பிரதேசங்களில் வீதிக்கு ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் போக்குவரத்துக்கு சிரமப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக கிரான் பகுதிக்கு இயந்திரப்படகுகள் ஈடுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மேலும் அனர்த்தத்தினால் ஏற்படுகின்ற பாதிப்பினை குறைப்பதற்கு கடற்படையினரின் உதவியும் ஏனைய படையினரும் உதவுவதற்கு ஆயுத்தமான நிலையில் உள்ளதாகவும் அரசாங்க அதிபர் உதயகுமார் தெரிவித்தார்.

திங்கட்கிழமை பகல் வரை மட்டக்களப்பு பிரதேசத்தில் 16.1 மில்லி மிற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி க. சூரியகுமார் தெரிவித்திருந்தார். 

No comments

Powered by Blogger.