50 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படுகிறார்கள்
மிரிஹானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 59 நைஜீரிய பிரஜைகளில் 9 பேர் தப்பிச் சென்றுள்ளதால், மீதமுள்ள 50 பேர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதி உடனடியாக நாட்டில் இருந்து நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிதி மோசடி உட்பட பல்வேறு சட்டவிரோத செயல்கள் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டு வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மிரிஹானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 9 பேர் முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பீ.ஜீ. கயான் மிலிந்த தெரிவித்துள்ளார்.
இந்த நபர்களை நாடு கடத்துவதற்காக விமான நிறுவனங்களிடம் விலைகள் கோரப்பட்டு, அதற்கான நிதியை கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்றை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மிரிஹானை தடுப்பு முகாமில் தற்போது 111 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பராமரிக்க மாதாந்தம் 10 லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாகவும் தெரியவருகிறது.
Post a Comment