Header Ads



குற்றங்களை துப்புத்துலக்கிய CID அதிகாரி நிசாந்த சில்வா சுவிற்சர்லாந்து பறந்தார்

(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எனப்படும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணை அறையின் பொறுப்பதிகாரியும், நாட்டை அதிர வைத்த பல முக்கிய குற்றங்கள் குறித்து துப்புத் துலக்கி சந்தேக நபர்களைக் கைது செய்தவருமான  சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.  

தான் முன்னெடுத்த விசாரணைகள் தொடர்பில் மேற்பார்வை செய்த தனது மேலதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட செயலராக இடமாற்றப்பட்டதை அடுத்தும், புதிய அரசாங்க மாற்றத்தின் பின்னரும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வந்த அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக அவர் இவ்வாறு நாட்டை விட்டு அடைக்களம் தேடி சுவிட்சர்லாந்து நோக்கி நிசாந்த சில்வா சென்றுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச  விமான நிலையத்தில் இருந்து இன்று நண்பகல், 12.50 மணிக்கு சுவிட்சர்லாந்தை நோக்கி அவரும் அவரது மனைவி, மூன்று மகள்மாரும்  நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல், த நேஷன் பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்தமை, ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் பல தொடர்பிலான விசாரணைகள் சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வவா தலைமையிலான குழுவினராலேயே முன்னெடுக்கப்ப்ட்டிருந்தது. 

அத்துடன் கடற்படை புலனாய்வு பிரிவு தொடர்புபட்ட கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து 5 மாணவர் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கீயமை தொடர்பிலான விசாரணைகள் அவர் முன்னெடுத்த மிக முக்கியமான விசாரணை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.