Header Ads



வஸீம் தாஜுதீன் விசாரணையை வழிநடத்திய CID பணிப்பாளர் ஷானிக்கு இடமாற்றமா..?

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையின் மிக அனுபவம் மிக்க, முன்னணி குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளரான தற்போதைய சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவை அந்த பதவியில் இருந்து நீக்கி வேறு கடமைகளில் அமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.  

இந் நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவை சி.ஐ.டி. பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு  தற்போது பொலிஸ் சூழல் பாதுகாப்பு பிரிவின் பணிப்பளராக இருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  டப்ளியூ. திலகரத்னவை நியமிக்க  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன நியமிக்கப்ப்ட்டுள்ளார். 

இந் நிலையில் அவரின் கீழ் வரும் பொலிஸ் திணைக்களத்தின் சி.ஐ.டி.யின் முக்கிய பதவியான பணிப்பாளர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த  தேசிய பொலிஸ் ஆணைக் குழு ஊடாக நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் உறுதி செய்தன.

நீண்டகாலமாக சி.ஐ.டி.யின் குற்றப் புலனாய்வாளராக கடமையாற்றி வரும் ஷானி அபேசேகர, சி.ஐ.டி. பொறுப்பதிகாரியாக, உதவி பொலிஸ் அத்தியட்சராக, பொலிஸ் அத்தியட்சராக, பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த நிலையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக தரமுர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2017 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி சி.ஐ.டி.யின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இந்த பதவி மாற்றத்தின் பின்னணி பற்றி யாரும் கருத்துத் தெரிவிப்பார்களா?

    ReplyDelete

Powered by Blogger.