இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில், சீனாவை முந்துகிறதா இந்தியா...?
- பாலசுப்ரமணியன் -
சீனாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நவம்பர் 29-ம் தேதி இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வருகிறார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே, வழக்கத்துக்கு மாறான அவசரத்துடன் இந்தியா தனது வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரை இலங்கைக்கு அனுப்பியது. அவர் புதிய அதிபரை சந்தித்துப் பேசியதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்த்துச் செய்தியை கோட்டாபயவிடம் அவர் ஒப்படைத்தார்.
இந்தியப் பிரதமரின் அழைப்பை ஏற்று கோட்டாபயவும் புது டெல்லி வர ஒப்புக்கொண்டார். கோட்டாபய பயணம் செய்யப்போகும் முதல் வெளிநாடு இந்தியாதான்.
இந்திய வெளியுறவு அமைச்சரின் அவசரமான இலங்கைப் பயணத்தையும், தயக்கமின்றி கோட்டாபய இந்தியா வர ஒப்புக்கொண்டதையும் எப்படிப் புரிந்துகொள்வது?
"வழக்கமாக, இலங்கையில் பிரதமர், ஜனாதிபதி முதலிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முதல்வேலையாக இந்தியா வருவது வழக்கம். டெல்லியில் அவர்கள் பூஜை செய்யப் போகிறார்கள் என்றுகூட தமாஷாக சொல்வார்கள். ஆனால், தற்போது சீனாவை கருத்தில் கொண்டு, புதிய அதிபர் இந்தியா வருவதற்கு முன்பே இந்தியா தனது வெளியுறவு அமைச்சரை இலங்கை அனுப்பியுள்ளது. நிலைமை மாறியுள்ளது என்கிறார்" மூத்த இந்தியப் பத்திரிகையாளரும், இலங்கையில் இருந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவருமான நிருபமா சுப்ரமணியன்.
2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகப் பார்க்கப்படும் நிலையில், "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இப்போது இந்தியா உறவை மேம்படுத்த விரும்புகிறது" என்ற தகவலை வெளியிட இந்தியா விரும்பியிருக்கலாம் என்கிறார் அவர்.
கோட்டாபய சீனா நோக்கிய சாய்வு உள்ளவர் என்று பார்க்கப்படுவதே, இந்திய வெளியுறவு அமைச்சர் ஏன் அவசர அவசரமாக இலங்கை சென்றார் என்பதை விளக்குகிறது என்றே பல பார்வையாளர்களும் சொல்கிறார்கள்.
இலங்கையில் இந்தியா என்ன சாதிக்க விரும்புகிறது என்ற கேள்விக்கு, "இதற்கு ஒரு விடை இல்லை. பல காரணங்கள் இருக்கலாம்" என்கிறார் நிருபமா.
மைத்ரிபால மீது அதிருப்தி கொண்ட இந்தியா
ஆனால், அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்ற ஆராய்ச்சி அமைப்பின் சென்னை பிரிவின் தலைவரான என்.சத்தியமூர்த்தி இதற்கு ஒரு விடை சொல்கிறார்.
2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்று, மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்ற பிறகு, இலங்கையில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் கூடும், இலங்கையின் சீனாவின் செல்வாக்கு மட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, சீனாவின் செல்வாக்கு இலங்கையில் குறையவே இல்லை என்கிறார் அவர்.
இந்தியாவின் எதிர்பார்ப்புகளை நிறைவேறுவதில் சிறிசேன அரசு எந்த முன்னேற்றமும் காட்டவில்லை என்ற ஏமாற்றம் இந்தியாவுக்கு இருந்தது. குறிப்பாக திரிகோணமலை துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தப் பின்னணியில், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தரும் அழுத்தத்தில் அவை கூறுவதை செவிமடுக்கும் நிலை இலங்கைக்கு ஏற்படும் முன்பே உறவைக் கட்டமைக்க இந்தியா நினைத்திருக்கும் என்கிறார் சத்தியமூர்த்தி.
அதே நேரம் ஏன் இந்தியா வருவதற்கு கோட்டாபய எப்படி உடனடியாக ஒப்புக் கொண்டார் என்ற கேள்விக்கு, பிரான்சில் வாழும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் கௌரிபால் சாத்திரி ஒரு விளக்கம் தருகிறார்.
கோட்டாபய தமது அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டதாக கூறிவிட்டாலும், அமெரிக்கா வெளியிட்ட குடியுரிமை துறந்தவர்கள் பட்டியலில் கோட்டாபய பெயர் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
அமெரிக்காவில் கோட்டாபயவின் சொத்துகள் இருக்கின்றன. இதைவைத்து, கோட்டாபய சீனா பக்கம் அப்பட்டமாக சாய்ந்துவிடாமல் தடுப்பதற்கான அழுத்தத்தை அமெரிக்கா கொடுத்திருக்கும் என்கிறார் சாத்திரி.
இதே கருத்து, வேறு சில பார்வையாளர்களுக்கும் இருக்கிறது.
சரி, கோட்டாபயவின் இந்தியப் பயணம் எப்படி இருக்கும்? இந்தியா விரும்பியதை இலங்கையில் எப்படி எட்டும்?
"கோட்டாபய பொறுப்பேற்று 15 நாட்களுக்குள் திடீரென எதுவும் மாறிவிடாது. இரு தரப்பு மற்றும் சர்வதேசப் பிரச்சனைகளில் என்னமாதிரியான பார்வை இருக்கிறது என்று இலங்கை மற்றும் இந்தியா ஒன்று மற்றொன்றை மதிப்பீடு செய்யும். தனது எதிர்பார்ப்புகளை இந்தியா பகிர்ந்துகொள்ளும். தமிழர் பிரச்சனை போன்றவற்றை எழுப்பும். ஆனால், கோட்டாபயவின் முதல் பயணத்திலேயே புதிய ஒப்பந்தம் போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது" என்கிறார் சத்தியமூர்த்தி.
Post a Comment