லசந்த விக்கிரமதுங்கவின் மகள், விடுத்துள்ள கோரிக்கை
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், இலங்கை மக்களிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் இதுவரையான பயணத்தைப் பார்க்கும்போது, அவரின் பயணம் வேதனை மற்றும் போராட்டங்களுடன் தமது வாழ்க்கையை நெருக்கமாக பிரதிபலிப்பதாக அஹிம்சா விக்ரமதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அவரின் எதிராளி, தமது தந்தையின் கொலையை தொலைக்காட்சியில் கொண்டாடிய ஒரு கோழை என குறிப்பிட்டுள்ள அஹிம்சா, ஜனாதிபதி பிரேமதாசவைக் கொலை செய்தமை குறித்து LTTE தலைவர் கூட அவ்வாறு பெருமை கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தன்னை குற்றமற்றவர் என நிரூபிப்பதற்கு பதிலாக காலம் தாழ்த்தல் மற்றும் தொழில்நுட்பக் காரணங்கள் ஊடாக விசாரணைகள் மற்றும் வழக்கைத் தவிர்ப்பதே ராஜபக்ஸவின் முறைமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எதிராளிகளுடன் விவாதிப்பதைத் தவிர்த்து, ஊடகவியலாளர்கள் கடுமையான கேள்விகளைக் கேட்கும்போது அவற்றை வேறு தரப்பிற்கு மாற்றுவதற்கு அவர் முயற்சித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தடைகளுக்கு மத்தியிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரசியல் வாழ்க்கையை முன்னெடுத்து, சிரமமான வழியில் வந்த சஜித் பிரேமதாச, தனிப்பட்ட தேவைகளை ஒதுக்கிவைத்து பொது நோக்கிற்காக செயற்படுவதை அஹிம்சா விக்ரமதுங்க பாராட்டியுள்ளார்.
தமது அரசியல் எதிராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்கு அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்த நபரைவிட, சஜித் பிரேமதாச கொடூர பயங்கரவாதத்தில் வேதனை அனுபவித்த மிகவும் சிறந்த நியாயமான அரச தலைவராவார் என தாம் நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment