Header Ads



எதை எதிர்பார்க்கின்றீர்கள் என, சஜித் என்னிடம் கேட்டார் - சம்பந்தன்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டங்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்றன.

அம்பாறையில் ஆலையடிவேம்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் கோட்டாபயவின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதை மறக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, மட்டக்களப்பு – கல்லடியில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், ஒரு போராளியாக இருந்த கருணா அம்மான் எவ்வாறு இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறினார் என கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தல் முடிந்ததும் முதல் வேலையாக இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் முறைப்பாடு முன்வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தால் பிள்ளையானும் கருணா அம்மானும் செய்த கொலைகள் எல்லாம் மூடி மறைக்கப்படும் எனவும் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை நான் முதன்முதலாக சந்தித்த போது, தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பிறகு, என்ன விதமான அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டார். உங்களுடைய தகப்பனுடைய காலத்தில் அவர் சொன்னார், எனக்கு தமிழீழம் தர முடியாது, ஆனால் ஈழத்தை விட எல்லாம் தருவேன் என்று. இன்றைக்கு நாங்கள் ஈழத்தை கேட்கவில்லை. ஆனால், எல்லாம் நாங்கள் கேட்கின்றோம். அதி உச்ச அதிகார பங்கீட்டை நாங்கள் கேட்கின்றோம். எமது மக்கள் தமது சொந்த கருமங்களுக்கு தாங்களே தீர்மானம் எடுத்து, தாங்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றி அமுல்படுத்தக்கூடிய நிலைமை இருக்க வேண்டும் என நான் கூறினேன்

இதேவேளை, தனது பிரஜாவுரிமை விடயத்தில் கூட பொய்களை உரைத்துக்கொண்டிருப்பவரே நாட்டின் ஜனாதிபதியாக வர எத்தனிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.