கட்சியில் இருந்த பாவிகளே, சஜித்தின் தோல்விக்கு காரணம் - ரணிலுக்கு இடமளிக்க முடியாது
கட்சியில் இருந்த சிலரின் செயற்பாடுகள் காரணமாகவே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -20- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட எடுத்துக்கொண்ட காலத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பல இடங்களுக்கு சென்று பிரசார நடவடிக்கைகளை நிறைவு செய்திருந்தாகவும் கூறினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பதவி விலகினாலும், அவருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை அரசாங்கத்தை நடத்துவதற்கான இயலுமை உள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தின் இறுதி பகுதியிலேயே பொதுத் தேர்தலை நடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கு பின்னர் ரணில் விக்ரமசிங்க எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வகிக்க இடமளிக்குமாறு கேட்டால் அதற்கு இணங்க முடியாது எனவும் அப்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டால் எமக்கு தனியாக பிரிந்து செயற்பட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
தமது அடுத்த பயணத்தை நாளை முதல் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்த ஹரீன் பெர்னாண்டோ, கட்சிக்குள் இருந்த சில பாவிகளின் செயற்பாடுகள் காரணமாகவே தோல்வியை சந்திக்க நேர்ந்தாகவும் குறிப்பிட்டார்.
எனவே யாராவது ஒருவர் அவசரப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுப்பது சிறந்த செயற்பாடாக அமையாது அதேபோல் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே நாட்டு மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தார்கள் எனவும் அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு தற்போதைய புதிய அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் தக்க பதிலை வழங்கும் எனவும் அதன் பிரதிபளிப்பை மக்கள் விரைவில் காண்பர் எனவும், புதிய பாராளுமன்றத்திலும் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக ஒரு அணி உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
மொத்தத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ள உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு பயணிப்பது கடுமையாக அமையும் எனவும் முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
Post a Comment