'என்னை கைதுசெய்து சிறையில் அடையுங்கள்' எனக் கோரியுள்ளனர் - ரிஷாத்
நீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனை வழங்க முடியாதெனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். சிங்கள இலத்திரனிய ஊடகங்களில் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக அபாண்டங்களை பரப்பினாலும் உண்மைகளை பொய்யாக்கி விட முடியாதெனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
வவுனியா சின்னசிப்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று (30) இடம்பெற்ற போது.பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். அங்கு அவர் உரையாற்றிய போது கூறியதாவது,
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் சிங்கள மொழி சார்ந்த இலத்திரனியல் ஊடகங்களை திறந்தால் எனது பெயரே அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. இதை நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ எனக்கு தெரியாது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து “முன்னாள் அமைச்சர் ரிஷாதை கைது செய்யுங்கள்! கைது செய்து சிறையில் அடையுங்கள்” என சிலர் தொடர்ச்சியாக கொக்கரித்து வருகின்றனர். சீ.ஐ.டி மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு புதுப்புது போலிக் குற்றச்சாட்டுக்களுடன் சென்று, குற்றச்சாட்டுக் கோவைகளை கையளிப்பதும் அதனை ஒளிப்பதிவாக்கி ஊடகங்களிலே பிரபல்யப்படுத்துவதுமே இவர்களின் நாளாந்த வாடிக்கையாகிவிட்டது .
ஒரு ஜனநாயக நாட்டில் எந்தவொரு குடிமகனும் தான் விரும்பும் ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமையுண்டு. அதே போல அரசியல் கட்சிகளின் தலைமைகளும் தாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசியல் சார்பான முடிவுகளை எடுக்கின்ற உரிமையும் அவர்களுக்கு இருக்கின்றது. ஆனால், அவர்களை அடக்க முயல்வதும், திட்டுவதும் எந்த வகையில் நியாயமென கேட்கின்றேன். கருத்துக்களை, கருத்துக்களால் மதிக்கின்ற சமூகத்தையும் ஜனநாயக விழுமியங்களை பேணுகின்ற சமூகத்தையும் உருவாக்காத வரை இந்த நாடு ஒருபோதுமே உய்வு பெறப்போவதில்லை.
பஞ்சுமெத்தையில் இருந்தோ, அரச குடும்பத்திலிருந்தோ நாம் இந்த பயணத்தை ஆரம்பிக்கவில்லை. வாழ்வே சூன்யமாகிவிட்ட ஓர் அவலச் சமூகத்திலிருந்து எழுந்துவந்து, ”அகதி” என்ற மூன்று எழுத்தை துடைக்க வேண்டுமென்ற புனித நோக்கத்தில் புறப்பட்டவர்கள் நாங்கள். அதுவும் அகதிக் கொட்டிலிருந்தே எமது பயணமும் ஆரம்பித்தது.
19 வருட பாராளுமன்ற வாழ்விலே எத்தனையோ, பொய்க் குற்றச்சாட்டுக்களும், அபாண்டங்களும் புனைகதைகளும் என் மீது சுமத்தப்பட்ட போதும், எந்தவொரு குற்றச்சாட்டும் இதுவரை விசாரிக்கப்படவுமில்லை. நிரூபிக்கப்படவுமில்லை. ஏனெனில் அந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்தவொரு உண்மையும் இருக்கவில்லை. அதே போன்று” இன்னும் நீதி வாழ்கின்றது” என நாம் எல்லோரும் நம்பினால் இனியும் எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்கவும் முடியாது, தண்டனை வழங்கவும் முடியாது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் காழ்ப்புணர்ச்சியிலும் என் மீதான எழுச்சியிலும் எம்மை அடக்க வேண்டுமென்ற இழி நோக்கிலும் சுமத்தப்படுகின்றவைகளே.
”நான் இதுவரை ஒரு ரூபாவேனும் அரச பணத்தை கையாடியது இல்லை. ஒரு கோப்பை தேநீரோ, ஒரு குவளை தண்ணீரோ ஹராமாக பருகியதும் இல்லை, உண்டதும் இல்லை. இஸ்லாமிய வழிமுறையில் வாழ்ந்து வருபவன் நான்.”
எனவே தான் எத்தனை தடைகள் வந்த போதும், எமது அரசியல் பயணத்திற்கும் மக்கள் பயணத்திற்கும் இறைவன் உதவி வருகின்றான். தொடர்ந்தும் அந்த உதவி எமக்கு இருக்கும் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். நாம் எவருக்கும் அநீதி இழைத்ததில்லை. தீங்கு செய்ததில்லை. நல்லதே செய்திருக்கின்றோம். நேர்மையாக செயலாற்றிருக்கின்றோம். இந்துக்கள், பெளத்தர்கள், முஸ்லிம்கள் , கத்தோலிக்கர் என்ற பாகுபாடின்றி பணியாற்றிருக்கின்றோம்.
“முல்லைத்தீவுக்கு நான் முதன் முறையாக சென்ற போது, கடற்புலிகளின் தலைவன் சூசையை சந்திக்க வேண்டுமென்று கோரப்பட்டேன். தனியாக என்னை அழைத்துச் சென்றனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு அங்கே கேட்கப்பட்டேன். உடனடியாக வந்து அரச உயர் மட்டத்தைச் சந்தித்து கட்டுமானப் பணிகளுக்கும் அபலை மக்களின் நல்வாழ்வுக்காகவும் உதவினோம்.
அதே போன்று இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட 3 இலட்சத்திற்கு மேற்பட்ட மெனிக் பாம் தமிழ் மக்களுக்கு என்னாலான அத்தனை உதவிகளையும் செய்திருக்கின்றேன். அகதிகளுடன் அகதிகளாக நானும் ஒரு தற்காலிக கொட்டில் அமைத்து, அங்கு தங்கி அந்த மக்களின் அன்றாட தேவைகளை கவனித்திருக்கின்றேன். உயர் தர அகதி மாணவர்களின் பரீட்சை விடயங்கள் மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்துடன் தினந்தோறும் மரணித்துக்கொண்டிருப்பவர்களின் இறுதிக்கிரியைகளுக்கும் உதவினோம் அவர்களின் துன்பங்களை பகிர்ந்துகொண்டோம், அகதி மக்களின் வைத்திய சேவை மற்றும் உணவு வசதிகளை தினமும் கவனிக்கும் பணியில் இதய சுத்தியாக இறைவனை முன்னுறுத்தி மேற்கொண்டிருக்கின்றோம்.” என்ற நிம்மதி இன்றும் எமக்குண்டு.
அதுமாத்திரமின்றி மெனிக்பாமில், தஞ்சமடைந்திருந்த மக்களை தேர்தல் ஒன்றுக்காக சுமார் 500 பஸ்களில் அரசின் உதவியுடன் வாக்களிக்க கொண்டு சென்று அவர்களின் வாக்குரிமையை நிலைநாட்டி இருக்கின்றோம். தற்போதைய ஜனாதிபதியின் சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் ஆதரவுடனும், அனுசரணையுடனேயே இந்த நடவடிக்கையை எனது அமைச்சின் மூலம் மேற்கொண்டோம்.
அதேபோன்றுதான், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் புத்தளத்தில் அகதிகளாக இருக்கும் வடமாகாண அகதிகள், சுமார் 12 ஆயிரம் வாக்காளர்களை 225 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் வடக்கில் வாக்களிக்க ஏற்பாடு செய்தோம். புத்தளத்தில் வாழும் அந்த இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வடமாகாணத்தில் உள்ள தமது பிரதேசங்களுக்கு வாக்களிக்கச் சென்ற போது இடையிலே ஓயாமடுவில் அவர்களின் வாகனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்தத் தடைகளையும் மீறி வாக்களித்து விட்டு மீண்டும் அவர்கள் திரும்பிய போது இடை நடுவிலே வாகனங்கள் மீது சரமாரியாக கல்வீசப்பட்டு பலர் காயங்களுக்குள்ளாகினர். ஜனநாயகத்தின் மீதான இந்த வாக்குரிமையை தடுக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டனர். இவர்களை அங்கு வாக்களிக்க அழைத்துச் செல்லும் அனுமதியை பிரதமரிடம் பெற்றிருந்தோம், நிதி அமைச்சிடமும் எழுத்து மூலம் பெற்றிருந்தோம், தேர்தல் ஆணைக்குழுவிடமும் தெரியப்படுத்தியிருந்தோம். எனினும், இப்போது இதனை வைத்து இலத்திரனியல் ஊடகங்களில் என் மீது சேற்றை வாரி வீசுகின்றனர்.
தினமும் என்னைப்பற்றி அவர்கள் பரப்பும் அபாண்டங்கள் குறித்து ஆதரவாளர்களாகிய நீங்களும் மற்றும் என் மீது அன்புகொண்ட நல்லுள்ளங்களும் கவலையடைந்திருப்பது, எனக்கு வருகின்ற குறுஞ்செய்திகளிருந்து தெரிகின்றது. நான் நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்பட்டிருப்பதனால் எவரும் இந்த சிலுசிலுப்புகளுக்கு அஞ்சவேண்டியதில்லை. மனக்கிலேசம் கொள்ள வேண்டியதில்லை. எவ்வாறான சூழ்ச்சிகள் செய்தாலும் இறைவனை மீறி எதுவுமே நடக்கப்போவதில்லை. இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
முதலில் இலங்கையில் உள்ள இனவாதிகலுக்கும்,இனவாத ஊடகங்களுக்கும் புதிய ஜனாதிபதி புனர்வாழ்வு அளிக்கும் திட்டம் ஒண்றை ஆரம்பிப்பது மிகம் அவசியம்.இல்லா விட்டால் எதிர்கால சந்ததிகல் அனைவரும் இனவாதிகலாகவே மாற்றப்படும் அபாயம் உள்ளது.
ReplyDeletePeople living in Puttalam Must Vote in Puttalam, not in Mannar.
ReplyDeletePlease don't try to cheat us.
You just bringing South living Muslims to North to increase your vote base, cheater.
ReplyDeleteஅப்படி ஒரு புனர்வாழ்வு திட்டத்தை ஆரம்பிப்பதாக இருந்தால் முதலில் இனவாதத்தையம் இனவாதிகளையும் ஊட்டி வளர்க்கும் Jaffna Muslim ஊடகத்திற்க்கே முதலில் வழங்க வேண்டும்.
ReplyDelete